Ad Banner
 பொது

தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கான மாற்று இடம் தயாராக உள்ளது

19/01/2026 08:01 PM

கோலாலம்பூர், 19 ஜனவரி (பெர்னாமா) --  கோலாலம்பூர், ஜாலான் மாஸ்ஜிட் இந்தியாவில் வீற்றிருந்த தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கான புதிய நிலத்தை அடையாளம் காண்பதில் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது.

மடானி பள்ளிவாசலை நிறுவுவது மற்றும் சம்பந்தப்பட்ட ஆலயத்தை மாற்று இடத்தில் அமைப்பது உள்ளிட்ட அனைத்து செயல்முறைகளும் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மத நல்லிணக்க கொள்கையின் அடிப்படையில் பின்பற்றப்படுவதாக கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.

மதநடைமுறைகளை நேர்த்தியாக கையாளும் விதமாக ஆலயத்தை இடமாற்றம் செய்வதற்கான புதிய நிலத்தை அரசாங்மே கண்டறிந்துள்ளதோடு, அது தொடர்பிலான அனைத்து ஒப்புதல்களையும் துரிதப்படுத்தி உள்ளதாக ஹன்னா யோ கூறினார்.

ஆலயத்திற்கான அனைத்து கட்டிடத் திட்டத்திற்கும், கடந்தாண்டு செப்டம்பர் 17ஆம் தேதியே கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் டி.பி.கே.எல் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, டிசம்பர் 5ஆம் தேதி சம்பந்தப்பட்ட அப்பபுதிய கோயில் தலம் இஸ்லாம் அல்லாதோர் வழிபாட்டுத் தலமாக அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதனை அடுத்து, அந்நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச நிலப்பணிக் குழு JKTWPKL இவ்வாண்டு ஜனவரி 14-இல் வழங்கியதாக ஹான்னா கூறினார்.

இவ்வாலயம் தொடர்பில் அனைத்து நிறுவனங்கள் மற்றும் நிர்மாணிப்புத் தரப்பினரை உட்படுத்தி இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கட்டுமானத்திற்கான விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இச்சந்திப்பைத் தொடர்ந்து தைப்பூசத்திற்குப் பின்னர், அனைத்து தரப்பினரோடும் நெருக்கமான மற்றும் வழக்கமான கலந்துரையாடல்களை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று ஹன்னா யோ தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)