புத்ராஜெயா, ஜனவரி 20 (பெர்னாமா) -- எஸ்.பி.எம் தேர்வை உட்படுத்திய அனைத்து தேசிய கல்வி முறைகளிலும் மலாய் மொழி மற்றும் மலேசிய வரலாறு கட்டாயமாக்கப்படும்
அதோடு, கல்வி அமைச்சின் பாடத்திட்டத்தின்படி இந்நடவடிக்கை அனைத்து கல்விப் பிரிவுகளுக்கும் பொருந்தும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக அனைத்து மாணவர்களும் கல்வி அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட மலாய் மொழி பாடத்திட்டத்தைப் பின்பற்றி எஸ்.பி.எம் தேர்வு அளவில் மலாய் மொழி மற்றும் மலேசிய வரலாற்றுத் தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
''அதனால்தான் நாங்கள் இப்போது மொழித் தேவைள் குறித்து விளக்கமளித்து வருகிறோம். மேலும் நமது நாட்டில் உள்ள அனைத்து கல்வி முறைகளும் அமைச்சின் பாடத்திட்டத்திற்கேற்ப மலாய் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்று கோருகிறோம். அது எஸ்.பி.எம்மாக இருந்தாலும் அனைத்துலகப் பள்ளிகளில் பயின்றாலும் இதே முறையைத் தான் பின்பற்ற வேண்டும். மலேசியாவைச் சேர்ந்த பல பிள்ளைகள் அனைத்துலகப் பள்ளிகளில் பயில்கின்றனர். எனவே, விதிவிலக்கு ஏதுமின்றி எஸ்.பி.எம் மலாய் மொழித் தேர்வையும் மலேசிய வரலாற்றுத் தேர்வையும் அவர்கள் எழுதுவது கட்டாயமாகும்'', என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.
தேசியப் பள்ளிகள், சீன மற்றும் தமிழ்ப் பள்ளிகள் அனைத்துலகப் பள்ளிகள், சமயப் பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் UEC பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட அனைத்து கல்விப் பிரிவுகளுக்கும் இம்முறை பொருத்தமாக அமையும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)