கோலாலம்பூர், ஜனவரி 20 (பெர்னாமா) -- வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு Keretapi Tanah Melayu Berhad - KTMB நிறுவனம் கிள்ளான் பள்ளத்தாக்கில் இரண்டு நாட்களுக்கு இலவச பயணச் சேவையுடன் நான்கு நாள்களுக்கு இடைவிடாது சேவையை வழங்கவுள்ளது.
நாட்டின் தைப்பூச கொண்டாட்டத்தின் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றான சிலாங்கூர் பத்துமலைக்கு ஏறத்தாழ 25 லட்சம் பக்தர்கள் மற்றும் சுற்றுப்பயணிகளின் பயணத்தை எளிமையாக்கும் நோக்கத்தில் அரசாங்கம் இத்தகையை முயற்சியை மேற்கொண்டுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
''இந்த இலவச சேவை பின்னிரவு மணி 12.30 தொடங்கி நள்ளிரவு 11.59 மணி வரை ஸ்கேன்-அவுட் பொறிமுறை ஏ.சி.ஜி தானியங்கி கதவு வழி பயன்படுத்தப்படும். எனவே இந்த 2 நாள் காலத்திற்குக் கணினி சேவையைப் பயன்படுத்தி பத்துமலைக்குப் பயணிக்க நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் பயணிகளை எதிர்பார்க்கிறோம்", என்றார் அந்தோணி லோக் சியூ ஃபூக்.
கோலாலம்பூரில் செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அந்தோணி லோக் அதனைத் தெரிவித்தார்.
வரும் ஜனவரி 30 தொடங்கி பிப்ரவரி இரண்டாம் தேதி வரை 24 மணி நேரத்திற்குக் கூடுதல் KTM Komuter சேவைகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.
இந்த ஆண்டில் தைப்பூச கொண்டாட்டத்துக்காக KTMB நிறுவனம் மொத்தமாக 609 பயணச் சேவைகளை வழங்கவிருக்கிறது.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 23 விழுக்காடு அதிமாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)