Ad Banner
 சிறப்புச் செய்தி

முதலாம் ஆண்டு மாணவர்களின் பதிவுகள் சரிவு; தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாம்

20/01/2026 07:51 PM

கோலாலம்பூர், ஜனவரி 20 (பெர்னாமா) -- 2026ஆம் ஆண்டுக்கான புதிய பள்ளித் தவணை தொடங்கியுள்ள நிலையில், நாடெங்கிலும் தமிழ்ப்பள்ளிகளில் பதிவான முதலாம் ஆண்டு மாணவர்களின் பதிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2025ஆம் ஆண்டில் 11,021-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, இவ்வாண்டில் 10,330-ஆக குறைந்திருப்பதை மலேசியத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பின் தரவுகள் காட்டுகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் அதன் எண்ணிக்கை சரிவை நோக்கிச் சென்றால் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் அதன் ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எஸ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

''ஆக, மாணவர்கள் குறைந்தால் ஆசிரியர்களின் என்ணிக்கையும் குறைக்கப்படும். ஆசிரியர் பயிற்சி கழகங்களில் பயிற்சிப் பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறையும். பள்ளிகளின் எண்ணிக்கையும் குறையும். தற்போது இருக்கும் 528 தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்படும். ஒரு காலத்தில் இந்தியர்களுக்கு அடையாளமாக இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் இருக்காது,'' என்றார் அவர்.

இதனிடையே, தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மலாய் மற்றும் சீனப்பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை எஸ்.எஸ் பாண்டியன் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது வருத்தமளிக்கும் தகவலாக இருப்பதாக கூறிய அவர், பெற்றோர்கள் எடுக்கும் முடிவில் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் பதிவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

''தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 72,000. இதர மொழி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 77,000. எந்தப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவை எடுப்பது பெற்றோர்தான். தமிழ் மீது பற்று இருப்பவர்கள் தங்களது பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புகிறார்கள்,'' என்றார் அவர்.

சமுதாயத்தில் பிள்ளைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வரும் நிலையில், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைவதாக பாண்டியன் தெரிவித்தார்.

இதனிடையே, தோட்டப்புறங்களில் தமிழ்ப்பள்ளிகள் இருந்தாலும், அங்குள்ள மக்கள் தொகைக் குறைந்துக் கொண்டு வருகிறது.

அரசாங்கம் இதனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால், தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் விளக்கினார்.

தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டு வருவது தொடர்பான கருத்துகளைக் கேட்டறிய பெர்னாமா செய்திகள் தொடர்பு கொண்ட போது பாண்டியன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)