Ad Banner
 பொது

ஆர்.பி.என் 2026 –2035 திட்டம், கல்வி முறையில் புதிய எழுச்சியை வலியுறுத்தும்

20/01/2026 05:36 PM

புத்ராஜெயா, 20 ஜனவரி (பெர்னாமா) -- மனித மதிப்புகள், இலக்கவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஏ.ஐ உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களின் தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, 2026 முதல் 2035ஆம் ஆண்டு வரைக்குமான தேசிய கல்வித் திட்டம் ஆர்.பி.என்-னை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிமுகப்படுத்தினார்.

இது, நாட்டின் கல்வி முறையில் புதிய எழுச்சியை வலியுறுத்துவதோடு,
மனிதாபிமான மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்கு இடையில் சமநிலையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை பறைசாற்றுவதாக அவர் தெரிவித்தார்.

இப்புதிய சீர்த்திருத்தம் திறனாற்றம் மிக்கது மட்டுமின்றி, நெறிமுறை மற்றும் போட்டித் திறன் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்கவும் விரிவுபடுத்தப்படுவதாக, புத்ராஜெயாவில் நடைபெற்ற சந்திப்பில் டத்தோ ஶ்ரீ அன்வார் விளக்கினார்.

''கல்வியின் அர்த்தம் என்ன? மனிதர்களுக்கு நாம் கல்வி கற்பிக்க விரும்புகிறோமா? நாம் மனிதர்களை வளர்ச்சி படுத்த விரும்புகிறோம். கரமா இன்சானியாவின் கொள்கை இது. மனித பரிமாணம் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது. அது பூமியில் வேரூன்றியிருக்க வேண்டும். அது மதிப்புகள் மற்றும் ஒழுக்கங்களின் வலிமையைக் கொண்டிருக்க வேண்டும். மனிதநேயம் என்றால் என்ன என்பதை அது தனக்குத்தானே கற்பிக்க வேண்டும்,'' என டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அதேவேளையில், நாடு பின்தங்கியிருக்காமல் இருக்க, ஏ.ஐ, ஸ்தெம் மற்றும் திவெட் போன்ற முக்கியமான துறைகளில் தேர்ச்சி பெறுவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட இக்கொள்கை சீராக இயங்குவதை உறுதி செய்யும் வகையில், மார்ச் மாத இறுதி தொடங்கி செயலாக்கத்திற்கான வளர்ச்சி அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு, அது தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

''மார்ச் மாத இறுதியிலிருந்து, பொறுப்பான அனைவரும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து செயல்படுத்தல் செயல்முறை குறித்த அறிக்கைகளை வழங்க வேண்டும், மேலும் இச்செயலாக்கம் சீராக இருப்பதை உறுதி செய்வதற்கு கே.எஸ்.யு, கே.பி மற்றும் அமைச்சர்கள் முழு பொறுப்பு வகிப்பர். இது வெறும் நினைவூட்டல் அல்ல, மாறாக, என்னுடைய கடுமையான எச்சரிக்கை,'' என டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

இதனிடையே, இத்திட்டத்தை வெற்றிப்படுத்துவதில், கல்வியாளர்களுக்கு ஆதரவாக, 10 கோடி ரிங்கிட்டை கூடுதல் நிதி ஒதுக்கீடாகவும் பிரதமர் அறிவித்தார்.

முன்னதாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு ஏற்கனவே ஒதுக்கீடு செய்திருந்த நிதியைத் தொடர்ந்து, ஆசிரியர் அறை வசதிகள் மற்றும் பள்ளி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இப்புதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)