Ad Banner
 பொது

முதலாம் வகுப்பில் ஆறு வயது மாணவர்கள்; பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம்

21/01/2026 04:50 PM

அலோர் ஸ்டார், ஜனவரி 21 (பெர்னாமா) -- 2027ஆம் ஆண்டு தொடங்கி, தங்களின் பிள்ளைகளை ஆறு வயதில் முதலாம் வகுப்பில் பதிவு செய்வது குறித்து பீதியடைய வேண்டாம் என்று பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

உண்மையிலேயே தயார்நிலையில் உள்ள மற்றும் சிறப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த அமலாக்கத்தில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்தார்.

"பீதியடைய வேண்டாம். அதுதான் மிகவும் முக்கியம். நீங்கள் அமைதியாக இருந்து கல்வி முறையில் ஒரு புதுப்பிப்பாக அதனைப் பார்க்க வேண்டும். அதனால்தான், அதை கட்டாயமாக்காமல் தொடங்கியுள்ளோம். அது ஒரு தேர்வு மட்டுமே. எனினும், முடிந்தவரை பெற்றோருக்கு சுதந்திரம் கொடுக்கிறோம். பிள்ளைகளின் தயார்நிலையுடன் வர வேண்டும்," என்றார் அவர். 

கெடா மாநில அளவிலான பாலர் பள்ளி PAKAT திட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர், செய்தியாளர்களிடம் ஃபட்லினா சிடேக் அவ்வாறு தெரிவித்தார்.

தேர்வுகள் மூலம் மாணவர்களின் பதிவு எண்ணிக்கை குறித்த தரவுகளை முன்கூட்டியே பெற்று அமைச்சு தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட வகுப்புகளைச் செயல்படுத்த தயார்நிலையில் உள்ள பள்ளிகளை, அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தகுதியைப் பூர்த்தி செய்யும் ஆசிரியர்கள் அடையாளம் காணவிருப்பதோடு, முதலாம் ஆண்டில் நுழையும் ஆறு வயது மாணவர்களைக் கையாள பல அம்சங்களில் அவர்கள் ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும்.

"ஒட்டுமொத்தமாக, உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் மற்றும் தயார்நிலை பரிசோதனைகள் போன்றவற்றுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், அவ்வப்போது நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம். குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக தயார்நிலையிலும் சிறந்த முடிவுகளையும் எடுக்க வாய்ப்பு அளிப்போம்," என்றார் அவர்.

ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு தேவைகள் உள்ள மாணவர்களின் பதிவு அதிகரிப்பு, நாடு முழுவதும் உள்ள சிறப்பு கல்வி வசதிகள் மற்றும் திறனை கல்வி அமைச்சு விரிவுப்படுத்த ஊக்குவிப்பதாக ஃபட்லினா சிடேக் கூறினார்.

சிறப்பு தேவைகள் உள்ள மாணவர்களின் தேவைகளை முழுமையாக ஆதரிக்கும் புதிய பாடத்திட்டத்தை செயல்படுத்துவது கல்வி அமைச்சு கவனம் செலுத்தும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.

"சிறப்பு கல்வியில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் 20 விழுக்காடு அதிகரிப்பதைக் காண்கிறோம். எனவே, இதனை விரிவுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதையும் பார்க்கிறோம். அதனால்தான், பாடத்திட்டமும் பின்தங்கவில்லை. அவர்கள் புதிய பாடத்திட்டத்தையும் கூடுதல் சிறப்பு கல்விக்கான பாடத்திட்டத்தையும் பின்பற்றுவார்கள். நமக்கு சிறப்பு கல்வி விளையாட்டுப் பள்ளியும் உள்ளது. மேலும், எங்களிடம் இன்னும் பல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக, அவர்களின் உள்கட்டமைப்பை பூர்த்தி செய்தால், அவர்கள் பின்தங்க மாட்டார்கள்," என்றார் அவர். 

மேலும், சிறப்பு கல்வியின் உள்கட்டமைப்பை நிறைவு செய்வதற்கு கல்வி அமைச்சு பல்வேறு திட்டங்களைக் கொண்டிருப்பதாக ஃபட்லினா தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)