Ad Banner
 பொது

பள்ளிகளில் குற்றத் தடுப்பு & பாதுகாப்பு அம்சங்களுக்கு பி.டி.ஆர்.எம் முன்னுரிமை

22/01/2026 06:33 PM

தாப்பா, 22 ஜனவரி (பெர்னாமா) -- பள்ளிகளில் குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு, அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது.

பாதுகாப்பான, உகந்த மற்றும் வளமான கற்றல் சூழலை உறுதி செய்வதற்காக 2018-ஆம் ஆண்டு தொடங்கி, பள்ளி தொடர்பு அதிகாரி, பி.பி.எஸ் திட்டத்தை அமல்படுத்தி வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் கூறினார்.

மாநில கல்வித் துறையுடன் இணைந்து குற்றத் தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை, ஜே.பி.ஜே.கே.கே மூலம் செயல்படுத்தப்பட்ட இம்முயற்சி, பள்ளி மட்டத்தில் பாதுகாப்புப் பிரச்சனைகளை விரிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட முறையில் நிவர்த்தி செய்யும் நோக்கமுடையது என்றும் அவர் தெரிவித்தார்.

பி.பி.எஸ் அதிகாரிகள் போலீசாருக்கும் பள்ளி தரப்பினருக்கும் இடையே முக்கிய உறவு பாலமாக செயல்படுகிறார்கள்.

அதோடு, ஆரம்பகால தடுப்புக் கல்வியை வழங்குதல், மாணவர்களிடையே சட்ட விழிப்புணர்வை அதிகரித்தல் மற்றும் பி.டி.ஆர்.எம்-மிற்கும் பள்ளிக்கும் இடையே நெருக்கமான உறவை உருவாக்கவும் அவர்கள் செயல்படுவதாக முஹமட் காலிட் விவரித்தார்.

''உண்மையில், பள்ளிப் பாதுகாப்பு என்பது ஒரு தரப்பினரின் பொறுப்பாக மட்டும் இருக்க முடியாது. பள்ளிச் சூழல் பாதுகாப்பாகவும், சாதகமாகவும், வளமாகவும் இருக்க ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், சமூகம் மற்றும் போலீசாருக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது,'' என்றார் அவர்.

இன்று, பேராக், பீடோர் ஆரம்ப் பள்ளியில் நடைபெற்ற "மீண்டும் பள்ளிக்குத் திரும்புவோம்" என்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவர் அவ்வாறு கூறினார்.

பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்களின் ஒழுக்கத்தை அடையாளத்தையும் உருவாக்குவதில் குற்றத் தடுப்பு மற்றும் சட்ட இணக்கம் தொடர்பான ஆரம்பக் கல்வி மிகவும் முக்கியமானது என்று முஹமட் காலிட் மேலும் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)