பத்துமலை, ஜனவரி 23 (பெர்னாமா) -- சமய உணர்வுடன் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில் சிலரின் கவனக் குறைவினால் இத்திருவிழா நடைபெறும் கோவில் வளாகங்கள் குப்பைகள் குவிந்த நிலையில் காணப்படுகின்றன.
உலகிற்கே நாகரீகம் கற்றுக் கொடுத்த மூத்த சமூகமான இந்திய சமுதாயத்தில் உலக மக்கள் கூடும் இத்திருநாளில் இதுபோன்ற செயல்களைத் தவிர்த்து முன் உதாரணமாக இருப்பதோடு சுத்ததைப் பேண வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.
பத்துமலை திருத்தலம் மட்டுமின்றி இந்திய சமூகத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் இதுபோன்ற நாள்களில் அனைத்து ஆலயங்களையும் சுத்தமாகப் பாதுகாக்கும் அவசியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் எடுத்துரைத்தார்.
''ஆலயங்களில் சுத்தத்தைப் பேணுவது மிகவும் முக்கியம். ஏனெனில், ஆலயங்கள் நம் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கின்றன. அதோடு, இந்தியர்கள் நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த சமூகம் என்பதால் நாம் முன்னோடியாக இருக்க இதை ஒரு அடையாளமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'', என்றார் யுனேஸ்வரன் ராமராஜ்.
அதேவேளையில், அதிகமான மக்கள் கூடும் தைப்பூசத் திருநாளில் வழங்கப்படும் அன்னதானம் பலரின் பசியைப் போக்குகிறது.
எனவே, வழங்கப்படும் அன்னதானத்தைப் போதுமான அளவில் எடுத்துக் கொள்ளுமாறும் வீணாடிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
''அன்னதானமாக வழங்கப்படும் உணவுகளைப் போதுமான அளவுக்கு மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக எடுத்து உணவுகளை வீண்ணடிப்பதைத் தவிர்க்க வேண்டும்'', என்றார் யுனேஸ்வரன் ராமராஜ்.
தைப்பூசத் திருநாள் சுமூகமாக நடைபெற போலீஸ் துறை, ஆலய நிர்வாகம், மாநில அரசாங்கம், ஊராட்சித்துறை என்று அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்பதை சுட்டிக்காட்டிய அவர் ஒருமைப்பாட்டு அமைச்சின் முழு ஆதரவும் இருக்கும் என்று குறிப்பிட்டார்.
அதேவேளையில், பொது மக்களும் இப்பெருநாளைச் சுத்தமாகவும் கலாச்சாரத்தைப் பின்பற்றியும் இந்நாளைக் கொண்டாடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)