ஈப்போ, ஜனவரி 26 (பெர்னாமா) -- 2023ஆம் ஆண்டு மூன்று வயது சிறுவன் ஒருவனைப் புறக்கணித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து பெண் ஒருவரை ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றம் இன்று விடுவித்து விடுதலைச் செய்தது.
இவ்வழக்கில் நியாயமான சந்தேகத்தை எதிர் தரப்பினர் எழுப்பியதைத் தொடர்ந்து நீதிபதி ஐனுல் ஷஹாரின் முஹமட் 48 வயதான நோரிசா கமீசை விடுவித்து விடுதலைச் செய்தார்.
அதோடு, நோரிசா கமீசாக்காகச் செலுத்தப்பட்ட ஜாமின் தொகையும் திரும்பச் செலுத்தப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி தாமான் புத்ரா பெர்மாயில் உள்ள வீடொன்றில் கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்கான நியாயமான ஏற்பாடுகள் இல்லாமல் அச்சிறுவனை விட்டுச் சென்றதாக நோரிசா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
2001ஆம் ஆண்டு சிறார் சட்டம் செக்ஷன் 33(1)(a)இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் அதிகபட்சம் 20,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஐந்தாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அவ்விரண்டுமே விதிக்கப்பட்டிருக்கும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)