Ad Banner
Ad Banner
 உலகம்

ஈரானின் எரிசக்தி தளங்களை அமெரிக்கா குறிவைக்கும் -டிரம்ப்

31/03/2026 06:46 PM

வாஷிங்டன் டி.சி., 31 மார்ச் (பெர்னாமா) -- ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாவிட்டால், ஈரானின் எரிசக்தி தளங்களை அமெரிக்கா குறிவைக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் எச்சரித்தார்.

அந்நீரணை உடனடியாக பயன்பாட்டிற்குத் திறக்கப்படாவிட்டால் ஈரானில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும், எண்ணெய் கிணறுகளையும் வெடிவைத்துத் தகர்த்து, முற்றிலுமாக அழிப்பதன் வழி அமெரிக்காவின் தாக்குதல் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று டிரம்ப் தமது 'Truth Social' தளத்தில் பதிவிட்டார்.

ஹோர்முஸ் நீரிணை உடனடியாகத் திறக்கப்படாவிட்டால், வேண்டுமென்றே இதுவரை தொடாத ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு ஆகியவற்றை வெடிவைத்து தகர்த்து தங்கள் இலக்கை முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

47 ஆண்டுகால பயங்கரவாத ஆட்சியில்' ஈரான் படுகொலை செய்து கொன்ற அமெரிக்க வீரர்களுக்கும், மற்றவர்களுக்கும் பழிவாங்கும் விதமாக இது அமையும் எனவும் டிரம்ப் அப்பதிவில் தெரிவித்தார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் அவ்விரு நாடுகளின் தளங்களை தாக்கியதுடன், வளைகுடா நாடுகளைத் தாக்கி ஹோர்முஸ் வழியாக மத்திய கிழக்கு எரிபொருள் ஏற்றுமதியையும் தடுத்தது.

மேலும், டிரம்ப் ஆயிரக்கணக்கான துருப்புக்களை மத்திய கிழக்குக்கு அனுப்பியுள்ள வேளையில், சிலர் ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இதனிடையே, இது தொடர்பில் கருத்துரைத்திருக்கும் தெஹ்ரான், அமெரிக்காவின் சமாதான பரிந்துரைகள் யதார்த்தமற்றவை என்று கூறியுள்ளது.

இஸ்ரேல் மீது பல திசைகளில் இருந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், போர் பரவலாக விரிவடைந்து வருகிறது.

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை துருக்கிய வான்வெளிக்குள் நுழைந்ததாகவும், பின்னர் கிழக்கு மத்தியதரைக் கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நேட்டோ வான் மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புகளால் அது சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் துருக்கியின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து இது போன்ற நான்காவது சம்பவம் இதுவாகும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)