புத்ராஜெயா, ஜனவரி 27 (பெர்னாமா) -- பிரதமர் துறையின் கீழ் செயல்பட்டு வந்த இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா தற்போது மனிதவள அமைச்சிற்கு மாற்றப்பட்டுள்ளது.
மடானி அரசாங்கத்தின் கீழ் இந்திய சமூகத்திற்கான திட்டங்களை கட்டமைத்து ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மித்ராவை மனிதவள அமைச்சிற்கு மாற்றுவது தொடர்பான முடிவை அமைச்சரவை அண்மையில் அங்கீகரித்தது.
நிர்வாகம் மற்றும் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படும் வரையில், மித்ராவை மனிதவள அமைச்சின் கீழ் கொண்டு வருவதால் எந்தவிதமான முரண்பாடும் ஏற்படாது என்று அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, இந்த மாற்றத்திற்கான காரணத்தையும் ரமணன் தெளிவுப்படுத்தினார்.
''முன்பு மித்ரா பிரதமர் துறையின் கீழ் செயல்பட்டது. அப்போது நான் துணை அமைச்சராக இருந்தபோது மித்ராவிற்காக நிறைய பேசினேன். இன்று முழு அமைச்சராக இருக்கிறேன். பிரதமர் என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை எனக்கு கொடுத்துள்ளார்,'' என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் நடைபெற்ற மனிதவள அமைச்சின் தர்மா மடானி திட்டத்தின் கையெழுத்திடல் மற்றும் அறிவிப்பு கடிதம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)