தமிழ்நாடு, ஜனவரி 30 (பெர்னாமா) -- தென்னிந்தியா, வேலூரில் நடைபெற்ற எருது விடும் விழாவில், சுமார் 300 காளைகள் குறுகிய, நெரிசலான தெருக்களில், பார்வையாளர்களின் கூச்சல் மற்றும் ஆரவாரத்துடன் போட்டியில் ஈடுபட்டன.
அலங்கரிக்கப்பட்ட அந்தக் கோயில் காளைகளையும், பங்கேற்பாளர்களின் காளைகளையும் பிடிக்க, அடக்க அல்லது அவற்றை நிறுத்தி, தங்கள் தைரியத்தை சோதிக்க மக்களும் அங்கு கூடினர்.
இந்தியா, தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான பாரம்பரிய விழாக்களில் ஒன்றான எருது விடும் விழா வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு பாரம்பரிய, நூற்றாண்டு பழமையான கிராமப்புற விளையாட்டாகும்.
இது பெரும்பாலும் பொங்கல் பண்டிகைகளின் போது நடத்தப்படுகிறது.
இதற்காக, குடும்பத்தில் ஒருவராக வளர்க்கப்படும் காளைகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக காளை பயிற்சியாளரான கவியரசன் தெரிவித்தார்.
''ஒரு மாடு 100 மீட்டர் ஓடினால், அந்த 100 மீட்டரில் 100 மாடுகள் இருந்தால் எந்த மாடு முதலாவதாக வருகிறதோ அதற்கு பரிசு வழங்கப்படும். அவற்றுக்கு நாங்கள் பாதாம், பிஸ்தா, வாரத்திற்கு ஒரு முறை நீச்சல் பயிற்சி, நாளொன்றுக்கு ஒரு முறை நடைபயிற்சி போன்றவை வழங்குவோம். தை மாதம் எங்கள் ஊரில் தெய்வமாக நாங்கள் கருதும் மாடுகளுக்கு இந்தப் போட்டியை நடத்துகிறோம். அது எங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக இருக்கும்,'' என கவியரசன் கூறினார்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழாவை எதிர்பார்த்து, விவசாயிகள் விலங்குகளின் உடல் வலிமையை மேம்படுத்தவும், சிறந்த செயல்திறனுக்காகவும் சிறப்புப் பராமரிப்பை வழங்குவதில் கணிசமாக முதலீடும் செய்கின்றனர்.
சில நேரங்களில், அவற்றை பராமரிப்பதற்கு லட்சக் கணக்கில் செலவிடுவதாக எருது உரிமையாளரான அண்ணாதுரை தெரிவித்தார்.
''இது வழக்கமாக, வளர்ப்பதுபோலதான். அதன் வேகத்தைப் பொருத்து கணிக்கப்படும். பெரிய முதலீடுதான். மாதத்திற்கு தீவனத்திற்கு மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவிடுகிறோம். செலவு என்றால் அதிகம்தான். ஆனால், திருப்திக்காக செய்கிறோம்,'' என
அண்ணாதுரை தெரிவித்தார்.
இந்த ஆண்டு, பந்தயத்தில் வேகமாக ஓடும் காளையின் உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு, இரு சக்கர வாகனங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)