ஜார்ஜ்டவுன், 30 ஜனவரி (பெர்னாமா) -- இவ்வாண்டு தைப்பூசத்தை முன்னிட்டு, தங்க ரதம், அதைத் தொடர்ந்து வெள்ளி ரத ஊர்வலமும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் முறைப்படியே நடைபெறம் என்று LWHPP எனப்படும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
வழக்கமாக தங்க ரதமே முன்னதாகவும், அதைத் தொடர்ந்தே வெள்ளி ரத ஊர்வலமும் நடைபெறுவதால், அவ்வழக்கத்தையே தொடர்ந்து பின்பற்ற இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவ்வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என். ராயர் தெரிவித்தார்.
''நாளைக்கு ஏறக்குறைய அதிகாலை மணி 5.30க்கு தங்க ரதம் குயின்ஸ்ட்ரீட் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்படும். அந்த ரதம் 5.30க்கு தொடங்கி முடிந்தவரை நள்ளிரவு மணி 12க்குள் பாலதண்டாயுதபானி ஆலய வளாகத்தைச் சென்றடைவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துக் கொண்டிருக்கின்றோம்,'' என்றார் அவர்.
எனவே, தங்க மற்றும் வெள்ளி ரத புறப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், ஆண்டுதோறும் செயல்படுத்தும் நடைமுறையே இவ்வாண்டும் பின்பற்றப்படுவதோடு, இதன் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் தங்கள் தரப்பு ஒத்துழைப்பை நல்கும் என்றும் ராயர் கூறினார்.
வழக்கத்திற்கு மாறாக, இவ்வாண்டு வெள்ளி ரதம் முன்னதாகவும், அதைத் தொடர்ந்தே தங்க ரதமும் புறப்படுவதாக எழுந்துள்ள வதந்திகள் குறித்து கருத்துரைக்கையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும், இந்த ஆண்டு பினாங்கு தைப்பூசத்தில் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், நெரிசலையும் இடையூறுகளையும் தவிர்க்க மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்ய சில புதிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவிருப்பதை ராயர் சுட்டிக்காட்டினார்.
''முக்கியமாக தைப்பூச தேதியில் அதாவது 2026ஆம் ஆண்டு முதலாம் தேதி பிப்ரவரி மாதம், தனி கருவிகள் பயன்படுத்தி பந்தல்களில் காவடி பாடல்கள் அல்லது பக்தி பாடல்களை ஒளியேற்றுவது ஏறக்குறைய இரவு மணி 11க்கு நிறுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறையை செயல்படுத்துவோம். இது புதிய விதிமுறை கிடையாது. எப்போதும் அமல்படுத்தப்படும் ஒரு விதிமுறையே,'' என்று அவர் மேலும் கூறினார்.
பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் இரவு மணி 11 அளவில் திருக்காப்பு என்ற பூஜை செய்தப் பிறகு, காவடி பாடல்களை ஒளியேற்றி, காவடிகள் இல்லாமல் வீதிகளில் நடனமாடிக் கொண்டிருந்தால், அது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், தண்ணீர்மலை ஆலயத்தில் ஒளியேற்றப்படும் பாடல்களும் நள்ளிரவு 12 மணியோடு நிறுத்தப்படும் என்று அவர் விவரித்தார்.
''காரணம் என்னவென்றால், நீங்கள் சைவம் இருந்து, 48 நாள்கள் விரதம் இருந்து, அலகு போட்டு காவடியை ஏந்தி வரும்போது, முக்கியமான பொறுப்பு என்னவென்றால் மேல் கோவிலை 12 மணிக்குள் வந்தடைந்து விட வேண்டும். வந்தடைந்த பிறகு நீங்கள் கொண்டு வரும் பால், சந்தணம் அல்லது நீங்கள் ஏந்திவரும் பூஜை பொருள்களைக் கொண்டு முருகனுக்கு பூஜை செய்தால்தான் உங்களின் நேர்த்திக்கடன் பூர்த்தியடையும்,'' என்று ராயர் தெரிவித்தார்.
சில நேரங்களில் காவடிகள் இரவு மணி 11க்குப் பிறகு வந்தடையும்போது திருக்காப்பு போட்டுவிட்டால், பக்தர்கள் அபசகுணமாகக் கருதி சினமடைவதை கோடி காட்டிய அவர், அதற்கு முன்னர் ஆலயத்தை வந்தடையுமாறு கேட்டுக் கொண்டார்.
தைப்பூசத்தை முன்னிட்டு, இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)