புது டெல்லி, பிப்ரவரி 02 (பெர்னாமா) -- இந்தியாவின் அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அந்நாட்டு நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தில், மின்னியல் உபரிபாகத் தயாரிப்பு தொழில்துறை, உயிரி மருந்து மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளுக்கு முன்னிறுத்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் முதலீட்டை அதிகரிக்க முதலீட்டாளர்கள் கோரிய துணிச்சலான சீர்திருத்தங்களை இந்தியா நிறைவேற்றவில்லை.
''நமது முதல் 'கர்த்தவ்யா' (கடமை)-இன் கீழ் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் நிலைநிறுத்தவும் ஆறு அம்சங்களில் தலையீடுகளை நான் பரிந்துரைக்கிறேன். ஒன்று, ஏழு வியூக மற்றும் எல்லைப்புறத் துறைகளில் உற்பத்தியை அதிகரித்தல். இரண்டு, பாரம்பரிய தொழில்துறைகளுக்குப் புத்துயிர் அளித்தல். மூன்று, வெற்றிபெற்ற எம்.எஸ்.எம்.இ-களை (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) உருவாக்குதல். நான்கு, உள்கட்டமைப்பிற்குச் சக்திவாய்ந்த உந்துதலை வழங்குதல். ஐந்து, நீண்டகால பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் ஆறு, வட்டார பொருளாதாரப் நகரங்களை மேம்படுத்துவது'', என்றார் நிர்மலா சீதாராமன்.
சில இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் 50 விழுக்காட்டு வரி மற்றும் புவிசார் அரசியல் ஏற்றத் தாழ்வுகளுக்கு மத்தியில் இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடையும் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.4 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)