Ad Banner
 பொது

மோட்டார் சைக்கிள் கழிவுநீர் குழியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி

03/02/2026 06:26 PM

சிரம்பான், பிப்ரவரி 3 (பெர்னாமா) -- நேற்றிரவு, நெகெரி செம்பிலான், தம்பின்-இல் உள்ள ஜாலான் பூங்கா தஞ்ஜோங் பகுதியில் சகோதரர்கள் இருவர் பயனித்த மோட்டார் சைக்கிள் ஒன்று 10 மீட்டர் ஆழமுள்ள திறந்தவெளி கழிவுநீர் குழியில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் நிகழ்ந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்னர், தம்பின் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த 14 வயது இளைஞர் இரவு மணி 11.30 அளவில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

சகோதரர்கள் இருவரும் தம்பின்-இல் இருந்து கோலா இனா-வுக்கு பயணம் செய்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர்  சுப்பரின்டென்டென்ட் அமிருட்டின் சரிமான் தெரிவித்தார்.

சம்பவ இடத்தை நெருங்கிய போது, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் கட்டுமானத்தில் இருந்த நீர் வடிகாலில் மோதியதைத் தொடர்ந்து, அந்நபர் திறந்தவெளி கழிவுநீர் குழியில் விழுந்துள்ளார்.

இந்நிலையில், 17 வயதுடைய அவரது சகோதரர் சிராய்ப்பு காயங்களுக்கு ஆளாகினார்.

தீயணைப்புத் துறையினர் அந்நபரை குழியில் இருந்து வெளியேற்றியப் பின்னர், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் செக்‌ஷன் 41 உட்பிரிவு (1)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)