கோலாலம்பூர், பிப்ரவரி 05 (பெர்னாமா) -- இந்திய மக்கள் தொகை அதிகமாக உள்ள மாவட்டங்களின் அடிப்படையில் தேவையுள்ள இந்திய சமூகத்தினருக்கு மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் ஒரு லட்சம் வெள்ளி நிதியுதவி வழங்குவது குறி மறுஆய்வு செய்யப்படுவதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்திய சமூகத்திற்கான மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் அவர், இதற்கு முன்பு இதர பல்வேறு முன்முயற்சிகளில் மித்ரா கவனம் செலுத்தியதால் இத்திட்டம் தொடரப்படவில்லை என்று கூறினார்.
"முன்னதாக 2024-ஆம் ஆண்டில், மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இடங்களில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு லட்சம் வெள்ளி உதவி வழங்கத் திட்டமிடப்பட்டது. இது நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் அல்லாமல், உள்ளூர் இந்திய சமூகத்தின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது.
"ஆனால் 2024-இல் (அது செயல்படுத்தப்படவில்லை), ஏனெனில் வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துதல், பள்ளி பராமரிப்பு உதவி, பாலர் பள்ளி திட்டங்கள், பொது வசதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கான திட்டங்கள் என பல்வேறு மாறுபட்ட திட்டங்கள் இருந்தன.
"இருப்பினும், இந்த ஆண்டு அதே திட்டத்தை மீண்டும் செய்ய நாங்கள் பரிசீலிப்போம் என்று என்னால் உறுதியளிக்க முடியும். மித்ராவில் இருக்கும் எங்களை விட, அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே தங்களின் பகுதியில் உண்மையிலேயே உதவி தேவைப்படும் இந்தியர்களைப் பற்றி நன்கு தெரியும் என்பதால், கூடுதல் ஒதுக்கீட்டுடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட முறையில் இது வழங்கப்படும்," என்று அவர் இன்று மக்களவையில் அமைச்சர்களுக்கான கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சேவை மையங்களுக்கு சிறப்பு நிதி வழங்கி, அதன் மூலம் தேவையுள்ள இந்தியர்களுக்கு நேரடியாக விநியோகிக்க மித்ரா தயாராக உள்ளதா என்பது குறித்து அஸ்லி யூசோப் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)