கோலாலம்பூர், பிப்ரவரி 13 (பெர்னாமா) -- கண்களுக்கு ஓய்வளித்து, செவிகளுக்கு விருந்தளித்து, தகவல், பாடல் மற்றும் செய்திகள் அடிப்படையில், அறிவையும் விழிப்புணர்வையும் பரப்பும் சக்திவாய்ந்த ஊடகமாகவும் சமூகத்தின் குரலாகவும், வானொலி செயல்பட்டு வருகிறது.
மக்களின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமான வானொலி, காலத்திற்கு ஏற்ப தொழிட்நுட்ப ரீதியில் பல மாற்றங்களைச் சந்தித்து வந்தாலும், அது தொடர்ந்து இயங்க, அறிவிப்பாளர்கள் அல்லது தொகுப்பாளர்களின் பங்கு அளப்பரியது.
அறிவிப்பாளர்களுக்கு இணையாக, அதன் பின்னணியில் செயல்படும் பல பிரிவுகளைச் சேர்ந்த, வானொலி பணியாளர்களின் பங்களிப்பு இருப்பதும் மறுப்பதற்கில்லை.
அந்த வகையில், இன்று கொண்டாடப்படும் அனைத்துலக வானொலி தினத்தை முன்னிட்டு, அவர்களின் சுவாரிஸ்யமான அனுபவங்கள் குறித்து, அடுத்து இடம் பெறுகிறது.
வானொலியில் செய்திகளை தொகுத்து வழங்கும் போதும் அல்லது நிகழ்ச்சிகளைப் படைக்கும் போதும் மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வது மட்டுமல்லாது, தகவல்களை உறுதிச் செய்வது உட்பட பல பொறுப்புகள் வானொளி அறிவிப்பாளர்களுக்கு உண்டு.
அதிலும், மக்களுக்கு தகவல்களை வழங்கும் கடமைக்கு மத்தியில், இன்றளவும் பல புதிய விஷயங்களைக் கற்று வருவதாக மின்னல் பண்பலை வானொலியின் இளம் அறிவிப்பாளர் கிஷன்ராஜ் நாகராஜன் தெரிவித்தார்.
''இந்த நாற்காலி மிகப் பெரிய பொறுப்பாகும். பல ஜாம்பவான்கள் இருந்த இடத்தில் இன்று நான் பணிப்புரிகிறேன். ஆக, மக்களிடம் சரியான தகவல்களைக் கொண்டுச் சேர்க்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. நிறைய போட்டிகள் இருக்கும். ஏனென்றால், செயல்முறைகள் மாற்றம் கண்டுக் கொண்டிருக்கும். அதற்கு நாங்கள் தயாராக வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் எங்களுக்கு ஒரு கற்றல் நடவடிக்கைதான். நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய வாய்ப்புகள் உள்ளது. ஏ.ஐ தொழில்நுட்பமும் அப்படிதான்,'' என்றார் அவர்.
இதனிடையே, ஏ.ஐ தொழில்நுட்பம் வானொலிக்கு பல வகையில் பயனளித்தாலும், அதன் பரிணாம வளர்ச்சியினால் அறிவிப்பாளர்களின் வேலை குறைந்துவிடும் என்று கூறப்படுவதை ஒரு சவாலாக பார்ப்பதாக ராகா வானொலி அறிவிப்பாளர் அகிலா சண்முகம் தெரிவித்தார்.
அதோடு, தொழில்நுட்பத்தைக் கடந்து ஓர் அறிவிப்பாளர் நேயர்களுடன் உரையாடுவதன் மூலம், அவர்களின் கருத்துக்களையும் அனுபவங்களையும் நேரடியாக கேட்டறியும் வாய்ப்பை தாம் ஒரு சிறந்த அனுபவமாக பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
''ஒவ்வொரு நாளும் பல நேயர்களுடன் நாங்கள் பேசுகிறோம். நிறைய விஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த அளவிற்கு எங்களுக்கு தொடர்புகள் இருக்கும்,'' என்றார் அகிலா.
செய்தி மற்றும் பாடல்களுக்கு அப்பாற்பட்டு, கதை உருவாக்கம், கதாப்பாத்திரங்கள் தேர்வு, ஒலி என்று பல செயல்முறைகளைச் சரிபார்த்து நாடகத்தை மக்கள் மனதில் உயிரோட்டமுள்ள அனுபவமாக படைக்கிறார்கள் வானொலி நாடகத் தயாரிப்பாளர்கள்.
அத்தகையச் சவால் நிறைந்த வேலையைச் செய்வதை பெருமையாகக் கருதுவதோடு தமது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார் மின்னல் பண்பலை வானொலி நாடகத் தயாரிப்பாளர் காயத்திரி கண்ணம்மா கைலாசம்.
''ஒரு வானொலி நாடகத்தை தயாரித்து வழங்குவது மிகப் பெரிய பொறுப்பு. அதற்கு நான்கில் இருந்து ஐந்து நாட்கள் கால அவகாசம் தேவைப்படும்,'' என்றார் அவர்.
ஆகவே, வானொலியின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், மற்றும் அறிவிப்பாளர்கள் அல்லது அதன் பணியாளர்கள் அர்ப்பணிப்பை நேயர்கள் அனைவரும் உணர்ந்து பாராட்டவே ஆண்டுதோறும் பிப்ரவரி 13-ஆம் தேதி உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)