ஈப்போ, பிப்ரவரி 14 (பெர்னாமா) -- பள்ளி வசதிகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள தேசிய வகை சீன இடைநிலைப் பள்ளிகளுக்குக் கூடுதலாக இரண்டு கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
மடானி கொள்கைகளுக்கு இணங்க, கல்வித் துறையை வலுப்படுத்துவதற்கும், பள்ளி வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும் இந்த ஒதுக்கீடு அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அவர் விளக்கினார்.
''அடிப்படை வசதிகளாக இருந்தாலும் சரி அல்லது வேறு ஏதாவது தேவைப்பட்டாலும் சரி, அனைத்து சீனப் பள்ளிகளும் கொஞ்சம் கூடுதலாகப் பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட 8 கோடி ரிங்கிட்டுடன் கூடுதலாக நாங்கள் வழங்குவோம். சீன சமூகத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நான் மேலும் இரண்டு கோடி ரிங்கிட் வழங்குகிறேன்,'' என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை, பேராக் ஈப்போவில் உள்ள யுக் சோய் சீன இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற சீனப் பெருநாள் நிகழ்ச்சியில் அன்வார் அவ்வாறு உரையாற்றினார்,
கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், ஒழுக்கமான, இனம், மதம் கடந்து ஒருவருக்கொருவரை மதிக்கும் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)