கோலாலம்பூர், பிப் 23 - மனிதவள மேம்பாட்டுக் கழகத்தின் (HRD Corp) சில உயர் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஒரு "களை எடுத்தல்" நடவடிக்கை அல்ல என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெளிவுபடுத்தினார்.
நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட தகுதியுள்ள நபர்கள் மட்டுமே அந்தப் பதவிகளை நிரப்புவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக, இடைநீக்கம் செய்யப்பட்ட நபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள முறைகேடு புகார்கள் குறித்த தற்போதைய விசாரணைகளை எச்ஆர்டி கோர்ப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும்; இந்த ஒட்டுமொத்த மறுசீரமைப்புப் பணிகள் மார்ச் மாத நடுப்பகுதியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள என்யு சென்ட்ரலில் 'MyFutureJobs' வேலைவாய்ப்பு ஆய்வு மையத்தைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பிப்ரவரி 6, 21 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட இடைநீக்கங்கள் குறித்து கருத்துத் தெரிவித்தார்.
"இந்த இடைநீக்க விவகாரத்தைப் பொறுத்தவரை, அங்கு முறைகேடு நடந்ததா இல்லையா என்பது குறித்த விசாரணை முதலில் முடிவடையட்டும். நாங்கள் தற்போது மேம்பாடுகளைச் செய்து வருகிறோம். சிலர் இதனை 'களை எடுத்தல்' அல்லது அது போன்ற ஒரு நடவடிக்கை என்று கூறினால், அது உண்மையில்லை. நாங்கள் தரத்தை உயர்த்தி வருகிறோம்.
"எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாத வகையில் அனைத்துச் சரியான வழிமுறைகளையும் சரியான இடத்தில் உறுதிப்படுத்தி வருகிறோம். முன்னதாக, பல சிக்கல்கள் எழுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டன. மேலும், தேசிய தணிக்கைத் துறையின் அறிக்கையிலும் பல சர்ச்சைக்குரிய விவகாரங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
"எனவே, இவை அனைத்தையும் சரிசெய்ய, நாம் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. எச்ஆர்டி கோர்ப்பின் கீழ் உள்ள திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக ஆளுமையில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
புதிய நியமனங்கள் குறித்து விளக்கிய அமைச்சர், அரசு சார்ந்த நிறுவன ஆணையத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் முன்னாள் துணை கருவூலச் செயலாளர் போன்ற அனுபவம் வாய்ந்த நபர்களைத் தற்போது நியமித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
"அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. தகுதியுள்ள ஒருவர், நிர்வாக ஆளுமைத் தரநிலைகள் மற்றும் எச்ஆர்டி கோர்ப் விதிமுறைகளின்படி தனது கடமைகளைச் சரியாகச் செய்ய முடியும் என்றால், அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தற்போதைக்கு, அத்தகைய அரசியல் பின்னணி கொண்டோர் யாரும் நியமிக்கப்படவில்லை," என்றார்.
கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி, பொதுக் கணக்குக் குழு, தேசிய தணிக்கையாளர் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகியவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில் மூன்று உயர்மட்ட உறுப்பினர்களை எச்ஆர்டி கோர்ப் இடைநீக்கம் செய்தது. அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை (பிப் 21), நிர்வாகக் குழுவின் மேலும் மூன்று உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த இடைநீக்கங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த எச்ஆர்டி கோர்ப் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ முகமது ஷமீர் அப்துல் அஜிஸ், தற்போது நடைபெற்று வரும் உள்விசாரணையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு நடைமுறை நடவடிக்கை மட்டுமே இது என்று தெரிவித்தார்.
நாட்டின் மிகப்பெரிய முகமைகளில் ஒன்றான எச்ஆர்டி கோர்ப், நிதி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்த புகார்களால் அண்மைய காலமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வாரிய உறுப்பினர்களை மாற்றியமைப்பது மற்றும் 7,000 பயிற்சி வழங்குநர்களை மறுஆய்வு செய்வது உள்ளிட்ட முக்கிய மறுசீரமைப்புப் பணிகளை டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.
புதிய வாரிய உறுப்பினர்களாக, இஸ்லாமிய நிதி பல்கலைக்கழக அனைத்துலகக் கல்வி மையத்தின் (INCEIF) தலைவர் பேராசிரியர் எமரிட்டஸ் டத்தோ டாக்டர் முகமது அஸ்மி ஓமர், மலேசிய கூட்டுறவு ஆணையத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ முஸ்லி ஜாஃபர் மற்றும் மைடின் (Mydin) நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)