ஜார்ஜ்டவுன், 04 மார்ச் (பெர்னாமா) -- மாநில வேளாண் தொழில்நுட்பம், உணவு உத்தரவாதம் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுக் குழுவின் தலைவரான ஃபஹ்மி சைனோ-லை, ஆட்சிக்குழுவில் இருந்து இன்று முதல் நீக்குவதாக பினாங்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பந்தாய் ஜெரெஜாக் சட்டமன்ற உறுப்பினரான அவருக்குப் பதிலாக புதிய நபரை ஆட்சிக்குழு உறுப்பினரை நியமிக்கும்படி, தமது தரப்பிற்கு கெஅடிலான் கட்சி பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலேவிடமிருந்து நேற்று அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்ததாக, பினாங்கு முதலமைச்சர் சோவ் கொன் யோவ் தெரிவித்தார்.
''புதிய ஆட்சிக்குழு உறுப்பினருக்கான பெயர் பரிந்துரையை, இன்று மாலை, மாநில ஆளுநர், துன் ரம்லி ஙா தாலிப்பிடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பேன். அதன் பின்னர், காலியான பதவியை நிரப்ப, புதிய ஆட்சிக்குழு உறுப்பினரை நியமிப்பது குறித்து எனது அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும்,'' என்றார் அவர்.
மாநில அரசாங்கத்தில் ஃபஹ்மி சைனோல், கெஅடிலான் கட்சியைப் பிரதிநிதிப்பதால், புதிய ஆட்சிக்குழு உறுப்பினரும் அக்கட்சியை சேர்ந்தவராக இருப்பார் என்றும் சோவ் விவரித்தார்.
கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி, தனது மனைவியை வேண்டுமென்றே காயப்படுத்திய வழக்கில் பாலிக் புலாவ் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஃபஹ்மி சைனோல் அக்குற்றத்தை மறுத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கெஅடிலான் கட்சியின் மத்திய தலைமைத்து மன்றம், கட்சியில் அவர் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]