Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

மத்திய கிழக்குப் பதற்றம்; வெளியுறவு அமைச்சுடன் உயர்க்கல்வி அமைச்சு அணுக்கமாக செயல்படும்

07/03/2026 04:48 PM

லூமுட், மார்ச் 07 - மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலைமையைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் உட்பட மலேசியர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான தொடக்கக்கட்ட முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பில், மாணவர்கள் உட்பட வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் விவகாரங்களைக் கையாளும் பொறுப்பினை ஏற்றிருக்கும் வெளியுறவு அமைச்சுடன், தமது அமைச்சு அணுக்கமாக செயல்பட விருப்பதாக உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் தெரிவித்தார்.

"நெருக்கடி ஏற்படும் பகுதிகளில் உள்ள மலேசியர்களை வெளியேற்றுவதை எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம் என்பதுதான் தற்போதைய முதற்கட்ட முயற்சியாக உள்ளதாக நான் அறிகிறேன். எங்கள் மாணவர்களைப் பொருத்தவரையில் நான் குறிப்பிட்டது போல், வெளியுறவு அமைச்சுடன் நாங்கள் இணைந்து செயலாற்றுவோம். ஏனெனில், அங்குள்ள மலேசியர்களின் நிலைமையை வெளியுறவு அமைச்சே கையாளவிருக்கிறது. இதில் அங்குப் பயிலும் எங்கள் மாணவர்களும் அடங்குவர்,'' என்றார் அவர்.

இன்று, மஞ்சோங் மாவட்டத்தில் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனத்தின் உதவி நிதியை வழங்கும் நிகழ்சியில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

ஆறு மத்திய கிழக்கு நாடுகளில் பயிலும் 1,936 மலேசிய மாணவர்கள் அவ்வட்டாரத்தில் ஏற்பட்ட பதற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பாதுகாப்பாக இருப்பது, கடந்த செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)