சிரம்பான், மார்ச் 07 - மத்திய கிழக்கில் உள்ள ஆபத்தான பகுதிகளில் சிக்கியிருக்கும் மலேசியர்களை இடமாற்றம் செய்ய அல்லது வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொள்கை அளவில் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், தேவைப்பட்டால் எந்நேரத்திலும் அதனை செயல்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்தால், புதிய அமைச்சரவையின் முடிவுக்காக காத்திருக்காமல் உடனடியாக அதனை செயல்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அனுமதி வழங்க அந்த நடவடிக்கை வழிவகுப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
"எங்களின் வெளியேற்றத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாங்கள் எந்நேரத்திலும் அதை செயல்படுத்தலாம். கொள்கை அளவில் வெளியேற்றத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஏதேனும் நிகழ்ந்தால் நாங்கள் அமைச்சரவைக்காகக் காத்திருக்க தேவையில்லை. அடுத்த வாரம் வரை காத்திருந்து நாங்கள் அதனை செயல்படுத்தலாம். வெளியுறவு அமைச்சு மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து தேசிய பாதுகாப்பு மன்றம், நிலைமையைக் கண்காணித்து வருகிறது. எங்கள் தூதரகத்தின் வெளிப்புற முகாம் எந்நேரமும் திறந்திருக்கும்," என்றார் அவர்.
இன்று, நெகிரி செம்பிலான் சிரம்பானின் நடைபெற்ற Khatam al-Quran நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.
இந்நிலையில், பதிலடி தாக்குதலுக்கான இலக்காக நம்பப்படும் இராணுவத் தளங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள மலேசியர்களுக்கு முஹமட் ஹசான் அறிவுறுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)