Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

எம்.எச் 370 விமானத்தின் சிதைவுகள் இதுவரை கண்டறியப்படவில்லை

08/03/2026 03:27 PM

கோலாலம்பூர், 08 மார்ச் (பெர்னாமா) --  தென் இந்திய பெருங்கடலின் ஒரு புதிய பகுதியில் மேற்கொள்ளப்படும் காணாமல் போன மலேசிய ஏர்லைன்சின் எம்.எச் 370 விமானப் பாகங்களைத் தேடும் முயற்சியில் எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.

கடலுக்கு அடியில் சுமார் 15 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடல் நடவடிக்கையை மேற்கொள்ள, முன்னதாக மலேசிய அரசாங்கம், Ocean Infinity நிறுவனத்துடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக, விமான விபத்து விசாரணைக் குழு, பி.எஸ்.கே.யூ கூறியது.

NO FIND, NO FEE அதாவது கண்டுபிடிக்கப்படாவிட்டால் கட்டணம் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில், இத்தேடல் நடவடிக்கை இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பி.எஸ்.கே.யூ குறிப்பிட்டிருந்தது.

முதலாம் கட்டம், கடந்தாண்டு மார்ச் 25 தொடங்கி 28-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டம் டிசம்பர் 31 தொடங்கி இவ்வாண்டு ஜனவரி 23-ஆம் தேதி வரையிலும் மேற்கொள்ளப்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

மொத்தம் 28 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கையில் சுமார் 7,571 சதுர கிலோமீட்டர் கொண்ட கடற்பரப்பில் வெற்றிகரமாக ஆய்வு செய்யப்பட்டதாக, பி.எஸ்.கே.யூ கூறியது.

மோசமான வானிலை மற்றும் நிலையற்ற கடல் நிலைமைகள் காரணமாக தேடல் நடவடிக்கை பாதிக்கப்பட்டதாகவும், அது கூறியது.

எனினும், விமானத்தின் பாகங்கள் எங்குள்ளன என்பதை உறுதிப்படுத்துவதற்கான எவ்வித ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று, அந்த அறிக்கையில் பி.எஸ்.கே.யூ குறிப்பிட்டிருந்தது.

2014ஆம் ஆண்டு, மார்ச் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு 239 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பயணித்த மலேசிய ஏர்லைன்சின் MH370 விமானம் ராடாரில் இருந்து காணாமல் போன சம்பவம் நிகழ்ந்து இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)