ஜோகூர் பாரு, 10 மார்ச் (பெர்னாமா) -- தரவு மேம்பாடு உள்ளிட்ட எந்தவொரு திட்டமும் மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தினால், ஜோகூர் மாநில அரசு அதை ஒருபோதும் அங்கீகரிக்காது என்று மந்திரி புசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி உறுதியாக கூறினார்.
ஒரு பொறுப்பான அரசாங்கமாக, பெரிய முதலீடுகளைப் பெறுவதற்காக மக்களை ஒருபோதும் பகடையாக பயன்படுத்தாது.
அதோடு, எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர், அரசாங்கம் பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
''பொறுப்பற்ற முடிவுகளை எடுத்து மக்களை ஒருபோதும் நாங்கள் துன்பத்தில் ஆழ்த்த மாட்டோம்,'' என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.
ஜோகூர் மந்திரி புசாரின் அதிகாரப்பூர்வ இல்லமான சௌஜானாவில், பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியர் அருள் ராஜூ துரை ராஜ்-சின் தலைமையில் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலின்போது, ஓன் ஹஃபிஸ் அந்த விபரங்களைத் தெரிவித்தார்.
ஜோகூரை தரவு மையமாக உருவாக்க வெளிநாட்டு நிறுவனங்கள் மையமிட்டிருப்பதைத் தொடர்ந்து, போதுமான நீர் மற்றும் மின்சாரம் வழங்கல் பிரச்சனை இம்மாநிலத்தில் ஒரு சர்ச்சைக்குரியதாக இருந்து வருவதை தாம் அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், ஜோகூரின் நீர் விநியோகம் நிலையானதாக இருப்பதை உறுதி செய்யும் ஒரு வியூக நடவடிக்கையாக, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்களை உள்ளடக்கிய ஜோகூரின் விரிவான நீர் விநியோக திட்டத்தை மாநில அரசும் மத்திய அரசாங்கமும் மதிப்பாய்வு செய்து விட்டதாகவும் ஓன் ஹஃபிஸ் விவரித்தார்.
ஜோகூர் மாநிலத்தில் நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட 15,300 கோடி ரிங்கிட்டில், மொத்தம் 38 திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக மாச்சாப் சட்டமன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
அதன் மூலம் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதோடு, மாநிலத்தின் தொழில் மற்றும் முதலீட்டு துறைகளின் வேகமான வளர்ச்சிக்கும் ஆதரவு கிடைக்கும் என்றும் ஓன் ஹஃபிஸ் கூறினார்.
தரவு மைய கட்டுமானம் குறித்து கருத்துரைத்த அவர், ஜோகூர் மாநில தரவு மைய மேம்பாட்டு ஒருங்கிணைப்பு செயற்குழு, JPPPDNJ மூலம் மாநில அரசு, தரவு மையத்தின் மேம்பாட்டிற்கான விண்ணப்பத்தை மதிப்பிட்டு, கேள்விக்குரிய நிறுவனத்தின் நீர் மற்றும் மின்சாரத் தேவைகளைப் பரிசீலிக்கும் என்றும் தெளிவுப்படுத்தினார்.
அதிக அளவு தண்ணீர் பயன்பாடு தேவையில்லாத குளிரூட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அடுக்கு 3 மற்றும் அடுக்கு 4 தரவு மையங்களை உருவாக்குவதற்கு மட்டுமே அச்செயற்குழு ஒப்புதல் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
''அந்த தரவு மையத்திற்கு அதிகமான நீர் பயன்பாடு தேவைப்படுவதாக இருந்தால், நாங்கள் அதற்கு ஒப்புதல் அளித்திருக்க மாட்டோம்,'' என்றார் அவர்.
சிம்பாங் ரெங்கம் மற்றும் பெனூட்டில் அண்மையில் ஏற்பட்ட நீர் விநியோகத் தடைகள், அந்தப் பகுதியில் ஒரு தரவு மையம் கூட செயல்படாவிட்டாலும், அதனுடன் தொடர்புடையது என்று சில தரப்பினர் குற்றம் சாட்டியபோது, நீர் மற்றும் தரவு மையங்கள் தொடர்பான பிரச்சனை எழுந்ததாக ஓன் ஹஃபிஸ் சுட்டிக் காட்டினார்.
"ஜோகூர் மக்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், பொறுப்பற்ற செய்திகள் மற்றும் தூண்டுதல்களைக் கேட்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும். எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் தகவல்களைச் சரிபார்க்க வேண்டும்," என்றார் அவர்.
ஆகவே, முதலீட்டாளர்கள் இவ்விவகாரத்தில் அதிருப்தி அடைவார்கள் என்று தான் அஞ்சியதால், இந்த விஷயத்திற்கு தாம் விளக்கமளிப்பதாகவும் ஓன் ஹஃபிஸ் கூறினார்.
"அதனால்தான் நான் விளக்கமளிக்கிறேன், ஏனென்றால் ஜோகூர் மக்களுக்கு மட்டுமல்ல, ஜோகூரில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையை அளிக்க விரும்புகிறேன். நாம் தொடர்ந்து நம்பிக்கையை உருவாக்க வேண்டும், அதுதான் மிக முக்கியமான விஷயம்,'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
2025-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின்படி, 16 ஆயிரம் கோடியே 44 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள 42 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, நாட்டின் தரவு மைய முதலீட்டின் முன்னோடியாக ஜோகூர் விளங்குகிறது.
இந்த வளர்ச்சி மலேசியாவின் செயல்பாட்டு தகவல் தொழில்நுட்பத் திறனில் சுமார் 7.8 விழுக்காடு பங்களிக்கிறது.
அதோடு, கூடுதலாக சுமார் 6,000 உயர் திறன் வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
அதே வேளையில், 2030-ஆம் ஆண்டுக்குள், நாட்டின் தரவு மைய திறனில் சுமார் 60 விழுக்காடு ஜோகூரில் மையமிடவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)