Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நாடறிந்த எழுத்தாளர் சீ.முத்துசாமி காலமானார்

12/03/2026 05:33 PM

கோலாலம்பூர், மார்ச் 12 (பெர்னாமா) -- சிறுகதைகள், நாவல்கள், மொழிப்பெயர்ப்புகள் போன்ற இலக்கிய படைப்புகள் வழி மலேசிய இலக்கியச் சூழலை வளப்படுத்துவதற்கு பங்களித்தவர்களில் ஒருவர், எழுத்தாளர் சீ.முத்துசாமி.

மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடியான இவர், மார்ச் 11ஆம் தேதி புதன்கிழமை காலமானார்.

கெடாவை பூர்வீகமாக கொண்ட சீ.முத்துசாமிக்கு, தேவி என்ற மனைவியும் மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்து, ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றியப் பின்னர் அவர், அரசாங்க பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, காப்புறுதி முகவராகப் பணியைத் தொடர்ந்தார்.

ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வந்த ஜெயகாந்தனின் புனைவுகளை வாசித்ததன் வழி தமிழ் இலக்கிய வாசிப்பில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

1971ஆம் ஆண்டு தனது 22-ஆவது வயதில் பீடோங்கில் நடந்த சிறுகதை போட்டியில் பங்கெடுத்து முதல் பரிசு பெற்றதன் வழி தொடர்ந்து புனைவிலக்கியத்தில் ஈடுபடத் தொடங்கினார்.

1978-ஆம் ஆண்டு 'இரைகள்' என்ற சிறுகதைத் தொகுப்பையும் 1980-ல் 'விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை' என்ற குறுநாவலையும் எழுதி வெளியீடு செய்தார்.

அவரின் 'இரைகள்' சிறுகதையும் மற்றும் 'மண் புழுக்கள்' நாவலும் பல பரிசுகளை வென்றுள்ளன.

1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் முழுமையாக இலக்கியச் சூழலில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட அவர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எழுதத் தொடங்கினார்.

இன்று மாலை 4.00 மணிக்கு சுங்கைப்பட்டாணி, Bandar Puteri JAYA-இல் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்ற இறுதி சடங்கிற்குப் பின்னர், அவரின் உடல் செண்ட்ரோல் 14 தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)