சுங்கை பட்டாணி, மார்ச் 12 (பெர்னாமா) -- கடந்த மாதம் 25-ஆம் தேதி, கெடா, புக்கிட் காயு ஹித்தாமில் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்தின், கமண்டர் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, கோப்ரல் அந்தஸ்து கொண்ட பொது செயல்பாட்டு படையின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்லைப் புலனாய்வுப் பிரிவில் பணிப்புரியும் 30 வயது மதிக்கத்தக்க அவர், மார்ச் 5-ஆம் தேதி, கெடா போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டதாக, கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா கூறினார்.
"புக்கிட் காயு ஹித்தாம் எல்லைப் புலனாய்வு பிரிவில் பணிப்புரியும் கோப்ரல் பதவிக் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியை சி.ஐ.டி ஜே.எஸ்.ஜே ஐ.பி.கே கைது செய்துள்ளது. மேலும், ஏழு நாள்களுக்குத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றார். அவர் அங்கு சுமார் நான்கு ஆண்டுகளாக இருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. சிறுநீரக பரிசோதனையில் கெத்தமின் வகை போதைப் பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது," என்றார் அவர்.
விசாரணைக்கு உதவ முன்னதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 11 சந்தேக நபர்களில் இவரும் ஒருவராவார் என்று, அட்ஸ்லி கூறினார்.
சம்பந்தப்பட்ட அந்த போலீஸ் உறுப்பினர் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சம்பந்தப்பட்ட கும்பலுடன் நெருகிய தொடர்பில் இருப்பதாக நம்பப்படுவது, தொடர் விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)