Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

ஹோர்முஸ் நீரிணையை மூடுவது மனிதாபிமான நடவடிக்கைகளைப் பாதிக்கும்

14/03/2026 04:39 PM

நியூ யார்க், 14 மார்ச் (பெர்னாமா) -- சரக்கு கப்பல்களின் முக்கிய வழித்தடமான மத்திய கிழக்கில் உள்ள ஹோர்முஸ் நீரிணையை மூடுவது, ஈரான் மீதான தாக்குதல்களினால் ஏற்பட்டிற்கும் மனிதாபிமான நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை, ஐநா எச்சரித்திருக்கிறது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களின் போக்குவரத்தை நிறுத்தும்போது, உணவு, மருந்து, உரம் மற்றும் பிற பொருள்களின் விநியோகம் தடைப்படும் என்று ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.

''ஹோர்முஸ் நீரிணை வழியாக மனிதாபிமான சரக்குகளை தடையின்றி பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு எங்கள் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் டாம் பிளெட்சர் இன்று அவசர அழைப்பு விடுத்தார். எந்தவொரு இடையூறும் உணவு, மருந்து மற்றும் பிற உயிர்காக்கும் பொருள்களின் விலையை அதிகரிக்கும் என்றும், மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள பாதிக்கப்படக்கூடிய மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்,'' என்றார் அவர்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் தாக்கத்தை தற்போது உணர முடிவதாக, ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் டாம் பிளெட்சரின் அறிக்கையை வாசித்த போது ஸ்டீபன் டுஜாரிக் கூறினார்.

காசாவில், மாவின் விலை 270 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மேலும், உலகளவில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கப்பல் செலவுகள் 16 விழுக்காடு அதிகரித்துள்ளன.

மேலும் கடல்வழிப் பாதைகளில் ஏற்படும் இடையூறுகள் உலகெங்கிலும் உள்ள நெருக்கடியான இடங்களுக்கு செல்லும் மனிதாபிமான ஏற்றுமதிகளை ஆறு மாதங்கள் தாமதப்படுத்தக்கூடும் என்று ஸ்டீபன் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)