கோலாலம்பூர், 17 மார்ச் (பெர்னாமா) -- தகுதி பெறாத ஆட்டக்காரர்களுடன் விளையாடியதால், முன்னதாக வெற்றி பெற்ற இரு ஆட்டங்களில் மலேசியா 0-3 என்ற கோல்களில் தோல்வியடைந்ததாக ஆசிய காற்பந்து சம்மேளனம், AFC அறிவித்திருக்கிறது.
இதனால், 2027-ஆம் ஆண்டு ஆசிய கிண்ண காற்பந்து போட்டியில் தேர்வாகும் வாய்ப்பு மலேசியாவுக்கு கேள்விக்குறியாகியுள்ளது.
தகுதியற்ற ஆட்டக்காரர்களைக் களமிறக்கிய வழக்கு தொடர்பாக, இன்று நடைபெற்ற ஆசிய காற்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு மற்றும் நெறிமுறைகள் குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக மலேசிய காற்பந்து சங்கம்,FAM அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்திருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி ஜோகூரில் நேபாள அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா 2-0 என்ற கோல்களிலும்
அதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா வியட்நாம் அணியை 4-0 என்ற கோல்களிலும் தோற்கடித்திருந்தது.
இந்நிலையில், AFC-யின் ஒழுங்கு மற்றும் நெறிமுறைகளை மீறிய காரணத்தால், அவ்வெற்றியை ரத்து செய்து, அவ்விரு ஆட்டங்களிலும் 0-3 என்ற கோல்களில் ஹரிமாவ் மலாயா தோல்வி அடைந்ததாக AFC இன்று அறிவித்ததோடு, ஒரு லட்சத்து 96,119 ரிங்கிட் அபராதத்தையும் விதித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 6 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)