Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

அல்-குர்ஆனை மிதித்து அவமதித்த ஆடவருக்கு 9 மாத சிறை

19/03/2026 03:08 PM

அலோர் காஜா, 19 மார்ச் (பெர்னாமா) --  கடந்த மாதம், இஸ்லாமிய மதத்தின் புனித நூலான அல்-குர்ஆனை மிதித்து, அதன் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் ஒருவருக்கு அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஒன்பது மாத சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

பிப்ரவரி 28-ஆம் தேதி, மஸ்ஜிட் தானா, கம்போங் டுரியான் டவுன் எனுமிடத்தில், இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் நோக்கில் இத்தகைய செயலை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டை அமிர் அப்துல் மாலிக் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷு யீ அத்தீர்ப்பை வழங்கினார்.

அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 295-இன் கீழ் அமிர் மீது குற்றம் பதிவாகியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் செயல் இஸ்லாமியர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதோடு, சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் அவை கடுமையான குற்றம் என்று மாஜிஸ்திரேட் தியோ தமது தீர்ப்பில் கூறினார்.

அதோடு, ரமலான் மாதத்தில் இதுபோன்ற செயல் நிகழ்ந்திருப்பது மேலும் வருத்தமளிப்பதாக அவர் கூறினார்

இதனிடையே, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறைத் தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)