புக்கிட் மெர்தாஜாம், 19 மார்ச் (பெர்னாமா) -- கடந்த வாரம் நான்கு மாத ஆண் குழந்தையைக் கொன்றதாக குழந்தைகள் காப்பகத்தின் பணியாளர் ஒருவர், இன்று புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
மாஜிஸ்திரேட் நூருல் ரஷிடா முஹமட் அகிட் முன்னிலையில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை, குற்றம் சாட்டப்பட்ட நூர் ஃபர்ஹனா ஃபஸ்மார் அப்துல்லா புரிந்ததாகத் தலையசைத்தார்.
இருப்பினும் கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால், அவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
மார்ச் 9-ஆம் தேதி பின்னிரவு மணி 1 முதல் மணி 4-க்குள், பினாங்கு செபராங் ஜெயா மருத்துவமனை பிந்தார் காப்பகத்தில் குழந்தைக்கு மரணத்தை ஏற்படுத்தியதாகக 22 வயதான நூர் ஃபர்ஹானா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வேதியியல் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதால், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஜூன் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.
இதனிடையே, விசாரணைக்கு உதவும் பொருட்டு குற்றம் சாட்டப்பட்டவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு 22 வயதுப் பெண், அதே நீதிமன்றத்தில் 10,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அந்தக் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதை பிரேதப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதை பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசீ இஸ்மாயில் நேற்று உறுதிப்படுத்தினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)