கோலாலம்பூர், 19 மார்ச் (பெர்னாமா) -- நோன்புப் பெருநாளை முன்னிட்டு, சாலைகளில் போக்குவரத்து நடமாட்டங்களைக் கண்காணிக்க , மலேசிய நெடுஞ்சாலை வாரியம், எல்.எல்.எம், 12 முக்கிய இடங்களில் அவசரகால உதவிக் குழுக்களை அமர்த்தியுள்ளதோடு, நெடுஞ்சாலை முழுவதும் 873 மறைக்காணிகளையும் செயல்படுத்தியுள்ளது.
பெருநாள் காலம் முழுவதும் ஒரு நாளைக்கு சுமார் 35 லட்சம் வாகனங்கள் வரை சாலையில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, எல்.எல்.எம்-இன் தலைமை இயக்குநர் முஹமட் ஹட்ஸ்மிர் யூசோஃப் கூறினார்.
'உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள், விபத்து அபாயத்தைக் குறையுங்கள்' எனும் தலைப்பில், பெர்னாமாவின் 'Ruang Bicara' நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் அதனை கூறினார்.
சாலைகளில் எதிர்பாரா நேரத்தில் நிகழும் சம்பவங்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்கப்படுவதை உறுதிச் செய்யும் வகையில், அரச மலேசிய போலீஸ் படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சாலைப் போக்குவரத்து துறை மற்றும் ஆம்புலன்ஸ் குழுக்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அவசரகால உதவி குழு பணியாற்றவிருப்பதாக, முஹமட் ஹட்ஸ்மிர் தெரிவித்தார்.
"எங்களுக்கு தெரியும் ஓரிடத்தில் நெரிசல் அல்லது விபத்து அல்லது வாகனம் பழுது போன்றவை ஏற்படுகின்றதா என்று. அந்த தகவலின் அடிப்படையில், நாங்கள் வழிநடத்துவோம். விநியோகிக்க, நெடுஞ்சாலை முழுவதும் இலக்கவியல் அறிவிப்பு பலகைகள் உள்ளன. எங்களிடம் 272 வி.எம்.எஸ் உள்ளன. ஆக, அங்குதான் நாம் முன்னதாக தெரிவிக்கப்பட்ட செய்திகளை வழங்குவோம்," என்றார் அவர்.
இதனிடையே, அதன் மூலம் பெறப்படும் போக்குவரத்து தகவல்கள் அனைத்தும், சாலையில் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள போலீசாரின் ரோந்து படையினருக்கு அனுப்பப்படும் என்று முஹமட் ஹட்ஸ்மிர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)