Ad Banner
Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மருத்துவ காப்புறுதி அட்டை ஏற்படுத்தி தர முயற்சி

21/03/2026 08:31 PM

பத்து கேவ்ஸ், 21 மார்ச் (பெர்னாமா) -- பொது விடுமுறை, பண்டிகை நாட்கள் என்று வேறுபாடு பாராமல் நாள்தோறும் உழைக்கும் ஊடகவியலாளர்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவது அவசியமாகும்.

அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மருத்துவ காப்புறுதி அட்டையை ஏற்படுத்தி தருவதற்கான முயற்சியை மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

மரண சகாய நிதி, சிகிச்சை நிதி, தீபாவளி அன்பளிப்பு நிதி உட்பட பல்வேறு திட்டங்களுக்கு முறையாக நிதியை ஒதுக்கிட்டு மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அதேபோன்று, தமது உறுப்பினர்களுக்கும் மருத்துவ காப்புறுதி அட்டையை வழங்குவதற்கான செயல்முறைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அச்சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

''உறுப்பினர்களுக்கு காப்புறுதி திட்டத்தை உருவாக்கி கொடுங்கள் என்று விழாவை தொடக்கி வைத்தபோது டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் கேட்டுக் கொண்டார். இது குறித்து காப்புறுதி நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டிருந்தோம். விரைவில் அதற்கு ஒரு வழியைக் கண்டுப்பிடித்து முடிவை எடுப்போம்,'' என்றார் அவர்.

இன்று சிலாங்கூர், பத்து கேவ்ஸில் நடைபெற்ற மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் குடும்ப தின விழாவில் உரையாற்றியப் பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ் ஊடகத் துறையில் உள்ள பணியாளர்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கியப் பங்கை இந்தக் குடும்ப தின விழா கொண்டிருப்பதாக முத்தமிழ் மன்னன் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ் ஊடகவியலாளர்களின் தேவையை அறிந்து இச்சங்கம் செயல்பட்டு வருவதாக, இவ்விழாவிற்கு வருகைப் புரிந்திருந்த உறுப்பினர்கள் சிலர் தங்களது கருத்துகளை பெர்னாமா செய்திகளிடம் பகிர்ந்து கொண்டனர்.

''ஒவ்வோர் ஆண்டும் இந்தக் குடும்ப தின விழா சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, இச்சங்கத்திற்கு தலைவராக இருந்தபோது நான் இரண்டு முறை இந்த நிகழ்ச்சியை ஏற்று நடத்தினேன். ஊடகவியலாளர்களின் ஒற்றுமையை இந்த விழா பிரதிபலிக்கிறது,'' என்றார் மூத்த பத்திரிக்கையாளர் கு.தேவேந்திரன்.

''மருத்துவ காப்புறுதி அட்டை திட்டம் ஒரு நல்லத் திட்டம் வரவேற்கக்கூடியது. ஏனென்றால், நேரம், காலம் பாராது உழைக்கும் ஊடகவியலாளர்களுக்கு இந்த மருத்துவ காப்புறுதி திட்டம் நிச்சயம் உதவியாக இருக்கும்,'' என்று நிருபர்கள் சிலர் கூறினர்.

காலை மணி பத்து தொடங்கி மாலை நான்கு வரை நடைபெற்ற இவ்விழாவில் 15 மூத்த ஊடகவியலாளர்கள் சிறப்பு செய்து கெளரவிக்கப்பட்டனர்.

உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிர்ஷ்ட குழுக்கள் வழி பரிசுகள் வழங்கப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)