ஜார்ஜ்டவுன், 23 மார்ச் (பெர்னாமா) -- கடந்த திங்கட்கிழமை, பினாங்கு, நிபோங் திபால், தாமான் பெகாகாவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணையைப் போலீசார் தொடங்கியுள்ளனர்.
தீ விபத்து குறித்து இதுவரை ஐந்து புகார்களைத் தங்கள் தரப்பு பெற்றுள்ளதாக, பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் கூறினார்.
வெடிப்பொருள்கள் சம்பந்தப்பட்ட விற்பனையில் கவனக் குறைவாக இருந்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டம் செக்ஷன் 286-இன் கீழ் இவ்விழக்கு விசாரிக்கப்படுவதாகவும், அது குறித்த மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டத்தோ அசிசி கூறினார்.
சம்பந்தப்பட்ட கடையின் பெர்மிட்டை உடனடியாக ரத்து செய்ததுடன், அப்பகுதியைச் சுற்றி பட்டாசு விற்பனை செய்யும் மற்ற கடைகளையும் செபிராங் பிராய் மாநகராண்மை மன்றம், எம்.பி.எஸ்.பி கண்காணித்து வருவதாக, டத்தோ பண்டார் டத்தோ பட்ருல் அமின் அப்துல் ஹமிட் தெரிவித்தார்.
அக்கடை பிப்ரவரி 19 தொடங்கி இம்மாதம் 24-ஆம் தேதி வரை செயல்பட எம்.பி.எஸ்.பி பெர்மிட் அனுமதியளித்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டதாக, டத்தோ அசிசி கூறினார்.
இதனிடையே, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், விசாரணையின் அதிகாரப்பூர்வ அறிக்கை பின்னர் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)