Ad Banner
Ad Banner
 பொது

புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை குறித்த போலி குற்றச்சாட்டு; போலீஸ் புகார் அளிக்கப்பட்டது

24/03/2026 03:51 PM

பினாங்கு, 24 மார்ச் (பெர்னாமா) -- புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனையை உட்படுத்தி போலியான குற்றச்சாட்டுகளைக் கொண்ட, இனவெறியைத் தூண்டும் அறிக்கைகள் சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருவது குறித்து, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சிம்மின் சிறப்பு அதிகாரி, இன்று போலீஸ் புகார் அளித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் மேற்கொண்ட பயணத்தின் உண்மைகளை, திரித்து கூறும் வகையில், இம்மாதம் 22-ஆம் தேதி தனிநபர் ஒருவர் தனது முகநூலில் வெளியிட்ட பதிவைத் தொடர்ந்து, போலீஸ் புகார் அளிக்கப்பட்டதாக லிம் செங் ஹான் கூறினார்.

மருத்துவமனையின் அடிப்படை வசதிகளைப் பார்வையிடவும், அதனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை மதிப்பிடவும் ஸ்டீவன் சிம், மருத்துவமனைக்கு பயணம் மேற்கொண்டதாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், கோயிலுக்கு இடையூறு ஏற்படாத வகையில் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படும் என்று அந்த பதிவில் ஆதாரமற்ற தலைப்பு இடம்பெற்றிருப்பதாக, அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அப்பதிவு சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமின்றி, நாட்டின் பன்முக சமூகத்திற்கு மத்தியில் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக லிம் கூறினார்.

இதனிடையே, மத்திய செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் புகார் அளிக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட சமூக ஊடக கணக்கின் உரிமையாளர் மீது உடனடியாக விசாரனை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளிடம் தங்கள் தரப்பு கேட்டுக் கொண்டிருப்பதாக, அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)