கோலாலம்பூர், 24 மார்ச் (பெர்னாமா) -- மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம், டி.பி.கே.எல் பராமரிப்பின் கீழ் உள்ள பொதுச் சாலைத் தடுப்பில் மரம் ஒன்று விழுந்ததில், ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், பெற்றோருக்கு எட்டு லட்சத்து 24,180 ரிங்கிட் இழப்பீட்டை, கோலாலம்பூர் டத்தோ பண்டார் வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
உயிரிழந்த 30 வயதான ஃபுன் முன் லாப்பின் பெற்றோர்களான 61 வயதுடைய கூய் லிங் சிம் மற்றும் 63 வயதுடைய ஃபுன் கோக் ஹோய் செய்த விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்து நீதிபதி எஃபெண்டி நசிலா அப்துல்லா அத்தீர்ப்பை அளித்தார்.
முன் லாப்பின் இறுதிச் சடங்கு செலவான 26,180 ரிங்கிட், இழப்பீட்டுத் தொகையாக ஏழு லட்சத்து 68,000 ரிங்கிட் மற்றும் துயரத்திற்கான இழப்பீடாக 30,000 ரிங்கிட் ஆகியவற்றை டத்தோ பண்டார் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
டி.பி.கே.எல்-இன் பராமரிப்பில் இருந்த அம்மரம், அமலாக்கத் தரப்பினரின் அலட்சியப் போக்கு, கண்காணிப்பு மற்றும் பராபரிப்பு ஆகியவை இருந்திருந்தால் அத்தகைய விபத்து நிகழ்ந்திருக்காது என்று 2026-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி அளித்த தீர்ப்பில் எஃபெண்டி தெரிவித்தார்.
விழுந்த மரம் மிகவும் பெரியதாகவும், முறையாகப் பராமரிக்கப்படாமலும் இருந்ததை டத்தோ பண்டார் ஒப்புக்கொண்டார்.
சம்பந்தப்பட்ட மரத்தை, வெட்டுதல், மற்றும் கத்தரித்தல் போன்ற பராமரிப்பு அல்லது கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் டி.பி.கே.எல் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதையும் நீதிமன்றம் கண்டறிந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)