Ad Banner
Ad Banner
 பொது

பெட்ரோலை அதிகமாக நெகிழி கொள்கலன்களில் நிரப்பியது தொடர்பில் விசாரணை

24/03/2026 04:13 PM

ஸ்கூடாய் , 24 மார்ச் (பெர்னாமா) -  ஸ்கூடாயில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில், கடந்த மார்ச் 21-ஆம் தேதி, உதவித்தொகைக்கு உட்பட்ட ரோன்95 பெட்ரோலை, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நெகிழி கொள்கலன்களில் நிரப்பியது தொடர்பில் ஜோகூர் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு, கேபிடிஎன் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இச்செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் வாகனம் ஒன்றின் காணொளி, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக, ஜோகூர் கேபிடிஎன் இயக்குநர் Lilis Saslinda Pornomo தெரிவித்தார்.

உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காக, மறைக்காணி பதிவுகளைச் சரிபார்த்து, பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் கொள்முதல் ரசீதுகளை ஆய்வு செய்தது உட்பட, சம்பந்தப்பட்ட வளாகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக Lilis அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய விநியோகக் கட்டுப்பாட்டாளர் அனுமதித்ததை விட அதிகமான அளவில், வாகனத்தின் பெட்ரோல் டாங்கியிலும், தனியாக நெகிழி கொள்கலனிலும், என இரண்டு முறை ரோன்95  பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தது தொடக்கக்கட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலைய நிர்வாகத்திடம் அமலாக்கக் குழு மேல் விசாரணையை நடத்தி வருவதாகவும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு நினைவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வாகனத்தின் உரிமையாளரைக் கண்டறிந்து, மேல் விசாரணைக்காக அவரை அழைத்து தொடர் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று Lilis விவரித்தார்.

இதன் தொடர்பான தகவல்களையோ அல்லது புகார்களையோ அளிக்க விரும்பும் பொது மக்கள் 019-848 8000 / 1-800-886-800 எண்கள், aduan@kpdn.gov.my மின்னஞ்சல் வழியாகத் தொடர்புக் கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)