Ad Banner
Ad Banner
 பொது

உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடிய வெப்ப அலை - விவேகத்துடன் செயல்படுவீர்

25/03/2026 03:59 PM

புத்ராஜெயா, 25 மார்ச் (பெர்னாமா) -- எளிதான நிலை தொடங்கி கடுமையானது உட்பட உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடிய வெப்பம் தொடர்பான பல்வேறு நோய்கள் தற்போது நாட்டைப் பாதித்து வரும் நீடித்த வெப்ப அலையினால் உண்டாகும். 

தலைவலி, சோர்வு, கவனம் சிதறல், தலைச்சுற்றல், தசை பலவீனம் அல்லது தசைப்பிடிப்பு மற்றும் குமட்டல் ஆகியவை, அதீத வெப்பத்தால் ஏற்படும் நோயிற்கான அறிகுறிகள் என்று, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

நீரிழப்பு, குழப்பம், சுயநினைவின்மை உட்பட உணர்விழப்பை இச்சூழல் உண்டாக்கும் என்று அவ்வமைச்சு தெரிவித்தது.

நீண்ட நேரம் வெப்பமான சூழலில் இருப்பவர்கள் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர்.

எனினும், சிறார்கள், முதியவர்கள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள், வெப்பமான காலநிலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெப்பமான காலநிலையில் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இதனால் அதிக ஆபத்து உள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டது.

ஜனவரி முதலாம் தேதி தொடங்கி மார்ச் 24-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான கண்காணிப்பின் அடிப்படையில், நாடு முழுவதும் வெப்பம் தொடர்பில் 15 நோய்கள் பதிவாகியுள்ளன. 

இதில் 11 பேருக்கு வெப்பச் சோர்வும், ஒருவருக்கு வெப்பத் தசைப்பிடிப்பும், மூவருக்கு வெப்பப் பக்கவாதமும் ஏற்பட்டுள்ளது

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)