கோலாலம்பூர், மார்ச் 25 (பெர்னாமா) -- தொழிலதிபர் விக்டர் சின் பூன் லோங், கிட்டதட்ட ஒரு கோடி ரிங்கிட் நிதியை கெடிலான் கட்சியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை அமலாக்கத் தரப்பினரிடமே ஒப்படைத்து விட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
அக்குற்றச்சாட்டு தொடர்பில் கெடிலான் கட்சியிடம் எந்தவொரு தகவலும் இல்லை என்றும் இதுவரை உள்தரப்பில் அதிகாரப்பூர்வ விவாதங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
"நாங்கள் இன்னும் சந்திப்பு கூட்டத்தை நடத்தவில்லை; அவரது அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்த செய்தி அறிக்கைகள் பற்றி தலைமைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி ஏதேனும் இருந்தால், அவற்றை விசாரணைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைப்போம். நாங்கள் மறைப்பதற்கு எதுவும் இல்லை. கட்சி அமலாக்க அமைப்புகளுடன் ஒத்துழைக்கும்," என்றார் அவர்.
யாரும் சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முடியாது என்று கூறிய கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் உறுதியான நிலைப்பாட்டிற்கு இணங்க, எந்தவொரு தவறான செயலையும் பாதுகாக்கப் போவதில்லை என்பதில் கெடிலான் கட்சி உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)