Ad Banner
Ad Banner
 பொது

ஈரான் மீதான தாக்குதல்; வன்மையாகக் கண்டித்தது மலேசியா 

27/03/2026 02:05 PM

புத்ராஜெயா, 27 மார்ச் (பெர்னாமா) -- அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை மலேசியா வன்மையாக கண்டிக்கிறது.

பொதுமக்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் அனைத்துலக சட்டத்தை மீறுவதற்கு சமம் என்றும் அது சாடியுள்ளது.

ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் மற்றும் அந்நாட்டில் உள்ள மக்களின் உயிரிழப்பிற்கு, மலேசியா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அனைத்துலக சட்டம், மனிதாபிமான கோட்பாடுகள் மற்றும் நீதியின் விழுமியங்களை மீறும் பொதுமக்களை இலக்காக கொண்ட எந்தவொரு செயலையும் மலேசியா வன்மையாக கண்டிப்பதாக, இன்று தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டிருந்தார்.

போருக்கு ஒரு நிரந்தர முடிவு எட்டப்பட வேண்டும் என்ற நோக்கில், பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயாராக இருப்பதையும், அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு, வலுவான உத்தரவாதங்கள் இல்லாமல் மேற்கொள்ளப்படும் போர் நிறுத்தம், வன்முறை சுழற்சியை மீண்டும் நிகழ செய்யும் என்பதை முன்னதாக காசா மற்றும் லெபனானில் நிகழ்ந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளதை, அன்வார் சுட்டிக்காட்டினார். 

இதனிடையே, நீதி, பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சமாதான முயற்சிகள் அமைய வேண்டும் என்றும் அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]