Ad Banner
Ad Banner
 பொது

நிலப் பத்திரத்தை பாதுகாக்காவிடில்  சட்டப் பிரச்சனைகளையும் மோசடி முயற்சிகளையும் எதிர்கொள்ளலாம்

30/03/2026 04:58 PM

கோலாலம்பூர், மார்ச் 30 (பெர்னாமா) -- ஒருவரின் சொத்துரிமையை உறுதிப்படுத்தும் மிக முக்கிய சட்ட படிவமாக, 'மனைப்பத்திரம்' எனப்படும் வீட்டு நில உரிமை ஆவணம் விளங்குகிறது.

இன்றைய நகர வளர்ச்சியில் நிலப்பத்திரத்தின் நிலை மற்றும் இருப்பிடம் பற்றி உரிமையாளர்களுக்கே தெரியாமல் இருப்பதால், ஒரு கட்டத்தில் சட்டப் பிரச்சனைகள் மற்றும் மோசடி முயற்சிகளை சிலர் எதிர்கொள்ள நேரிடுகிறது.

நிலப்பத்திரம் சரியாக இல்லாத பட்சத்தில் ஒருவர் அந்நிலத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அல்லது விவசாயம் செய்தாலும் ஒரு காலகட்டத்தில் அது உரிமையாளரின் கை நழுவிபோக வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் யோகேஸ் எம்.வீரசுந்தரம்.

ஒரு நிலத்தை வாங்குவது, உயில் எழுதுதல், அடகு வைத்து கடன் பெறுதல் போன்ற செயல்களுக்கு அசல் நிலப்பத்திரம் மிகவும் அவசியம் என்று வழக்கறிஞர் யோகேஸ் கூறினார்.

குற்றவியல் சட்டம், செக்‌ஷன் 166, துணைப் பிரிவு ஒன்று D-இன் கீழ் மூன்று காரணங்களை உட்படுத்தி மட்டும் அத்தகைய நிலப்பத்திரம் தொலைந்து போனால் அதை எவ்வித சிக்கலும் இன்றி சுலபமான முறையில் மறு விண்ணப்பம் செய்து பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் விவரித்தார்.

''முதலாவதாக பத்திரம் தொலைந்து போய்விட்டால் விண்ணப்பிக்கலாம். அதையடுத்து இயற்கை பேரிடரால் சேதமுற்றிருந்தால் அதை கோடி காட்டி விண்ணப்பிக்கலாம். இவற்றைத் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் மூன்றாம் தரப்பினரிடம் இப்பத்திரம் இருந்தாலும் அதற்கும் அவர்கள் விண்ணப்பிக்கலாம்,'' என்று யோகேஸ் கூறினார்.

அவ்வாறு போலீசில் புகார் செய்யும் போது, அந்த நிலத்திற்கு பல உரிமையாளர்கள் இருந்தால், அனைவரும் சேர்ந்து புகார் செய்தால்தான் அது ஏற்கப்படும்.

இல்லையேல், நிலப் பத்திரம் கிடைப்பதில் உரிமையாளர்கள் சட்ட சிக்கல்களை சந்திப்பார்கள் என்றும் யோகேஸ் நினைவுறுத்தினார்.

"உதாரணத்திற்கு நில எண், பத்திரத்திற்கான எண் பதிவு உள்ளிட்ட மனைப்பத்திரத்தின் அனைத்து தகவல்களையும் முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டும். மனைப்பத்திரம் கையில் இல்லாத நிலையில் அப்பத்திரத்தின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு எஸ்.என்.பி-இன் உதவியையும் பொதுமக்கள் நாடலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.

அதன் பின்னர், சத்தியப்பிரமாண அதிகாரி முன் புகாரை பதிவு செய்து கடிதம் பெற்ற பிறகே, நில அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நில ஆய்வுப் பத்திரம், அண்மையில் செலுத்தப்பட்ட நில வரி ரசீதுகள், நிலம் வாங்கும்போது பெற்ற சத்திய பிரமாணக் கடிதம் மற்றும் போலீசில் செய்யப்பட்ட புகாரை அனைத்தையும் இணைத்து அதிகாரிகளிடம் சமர்ப்பித்தால் மட்டுமே அந்த விண்ணப்பம் முழுமையாக ஏற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இத்தகைய விண்ணப்பத்தின் போது அந்நிலம் காலவரம்பிற்கு உட்பட்டதா அல்லது சொந்த நிலமா என்பதைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் உரிமையாளர்களிடமிருந்து கணிசமான கட்டணத்தை வசூலிப்பார்கள்.

அதற்குப் பின்னரே, நில அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலத்தை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, எந்த சிக்கலும் இல்லாத நிலையில் பின்னர் நிலப்பத்திரத்தை உரிமையாளர்களுக்கு வழங்குவார்கள் என்று வழக்கறிஞர் யோகேஸ் பெர்னாமா செய்திகளிடம் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)