Ad Banner
Ad Banner
 சிறப்புச் செய்தி

சிகரெட்டை கைவிட வேப் தீர்வாகுமா

31/03/2026 04:56 PM

கோலாலம்பூர், 31 மார்ச் (பெர்னாமா) --  இன்றைய உலகம் விவேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இளைஞர்களின் வாழ்க்கை முறையிலும் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் உருவாகியுள்ளன.

குறிப்பாக, மன அழுத்தம், சமூக தாக்கம், நண்பர்களின் செல்வாக்கு போன்ற காரணங்களால் புகைப்பழக்கம் என்பது பல இளைஞர்களின் வாழ்வின் ஓர் அங்கமாக மாறியுள்ளது.

ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் அப்பழக்கத்தில் இருந்து விடுப்பட வேப் எனப்படும் மின்னியல் சிகரெட்டின் பயன்பாடு அண்மைய காலங்களின் மாற்று வழியாக முன்னிலைப்படுத்தப்படுகிறது.

மாற்று வழியாக பயன்படுத்தப்படும் வேப் உண்மையில் புகைப்பழகத்தில் இருந்து விடுப்பட உதவுகின்றதா அல்லது மறைமுக அடிமையாக மாற்றியுள்ளதா என்பது குறித்த சிறப்பு தொகுப்பு தொடர்ந்து இடம்பெறுகின்றது.

உடல் ஆரோக்கியத்திற்குக் குறைவான தீங்கை வழங்குவதோடு, புகை இல்லாமல், புகைப்பழக்கத்தை மெதுவாகக் குறைக்க உதவுவதாக எண்ணி பலர் மின்னியல் சிகரெட்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், சிகரெட்டோடு ஒப்பிடுகையில் மின்னியல் சிகரெட்டின் பயன்பாடு அண்மையக் காலமாகதான் இளைஞர்கள் மத்தியில் பரவலாகி வரும் நிலையில், அதன் ஆபத்து குறித்த புள்ளி விவரங்கள் இன்னும் முறையாக தெரியவில்லை என்று மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு மூத்த ஆலோசகர் டத்தோ டாக்டர் ரிஷா மாணிக்கம் தெரிவித்தார்.

''சிகரெட்டுக்கு மின்னியல் சிகரெட் ஒரு தீர்வு அல்ல. மருந்தென நினைத்து நஞ்சை உட்கொள்வதற்கு சமம். சிகரெட் என்பது பல காலமாக இளைஞர்கள் பயன்படுத்துவதால் அதன் ஆபத்து குறித்த புள்ளி விவரங்கள் தெளிவாக உள்ளன. ஆனால், வேப் அண்மைய காலமாக தான் பயன்படுத்தப்பட்டு வருவதால். அது குறித்த புள்ளி விவரம் முறையாக இல்லை. ஆனால், புள்ளி விவரங்கள் இல்லாதபோதே நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் அதிகமாக ஏற்படுகின்றது'', என்றார் அவர்.

சிலர் சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கு மின்னியல் சிகரெட்டைப் பயன்படுத்துவதாக கூறினாலும், நாளடைவில் இரண்டிலிருந்தும் விடுபட முடியாமல் சிக்கி தவிப்பதாக, அவர் கூறினார்.

அதோடு, புகைப் பழக்கத்திலிருந்து விடுபடுவது ஒரு நாளில் நடக்கக்கூடிய செயல் அல்ல.

மாறாக, முறையான திட்டமிடல் மற்றும் மன உறுதியுடன் தொடர்ந்து முயற்சித்தால் சிறிய மாற்றத்தைக் காண முடியும் என்று டாக்டர் ரிஷா வலியுறுத்தினார்.

எனவே, புகைப் பழக்கத்தை நிறுத்தினால் அடுத்த இரண்டு வாரங்களில் நுரையீரல் மீண்டும் புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும் என்று டாக்டர் ரிஷா கூறினார்.

இதனிடையே, புகைப் பழக்கத்திற்கு மாற்று வழியாக மின்னியல் சிகரெட்டுகள் பயன்படுத்தும் இளைஞர்களின் நிலைப்பாடு குறித்து பொதுமக்களிடமும் பெர்னாமா செய்திகள் கேட்டறிந்தது.

எனவே, தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும், மன உறுதியுடன் தொடர்ந்து முயற்சி செய்தால் புகைப்பழக்கத்தில் இருந்து விடுப்படுவது சாத்தியம் என்று அவர்கள் கூறினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)