பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 02 (பெர்னாமா) -- கிக் தொழிலாளர் சட்டம் 2025-க்கு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் - எம்டியுசி (MTUC) தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதுடன், இச்சட்டம் கிக் தொழிலாளர்களுக்கு மிகவும் தேவையான அடிப்படைப் பாதுகாப்புகளை வழங்குகிறது என்று கூறியுள்ளது.
எம்டியுசி தலைவர் டத்தோ அப்துல் ஹலீம் மன்சூர் கூறுகையில், இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் கிக் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதாகும் என்றும், எந்தவொரு சட்டப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதை விட ஓரளவாவது பாதுகாப்பு இருப்பது சிறந்தது என்றும் தெரிவித்தார்.
சில குழுக்களின் எதிர்ப்புகளை நிராகரித்த அவர், அவர்களின் கவலைகள் சட்டத்தின் உண்மையான உள்ளடக்கத்தின் அடிப்படையில் அமையவில்லை என்று கூறினார்.
அப்துல் ஹலீமின் கூற்றுப்படி, இந்தச் சட்டம் கிக் தொழிலாளர் ஆலோசனை மன்றம், கிக் தொழிலாளர் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பிணக்குகளைக் கையாளுவதற்கு ஒரு கிக் தொழிலாளர் தீர்ப்பாயத்தை நிறுவுவதன் மூலம் பாதுகாப்பை வழங்குகிறது.
மேலும், கிக் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை அமைக்கும் அல்லது அதில் சேரும் உரிமையை இந்தச் சட்டம் நீக்கவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
"கிக் தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்க விரும்பினால், அவர்கள் 1959-ஆம் ஆண்டு தொழிற்சங்கச் சட்டம் மற்றும் 1967-ஆம் ஆண்டு தொழில் உறவுகள் சட்டத்தின் கீழ் அதைச் செய்ய முடியும். இது கூட்டு ஒப்பந்தங்களைப் பேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்கு அனுமதி அளிக்கிறது," என்று அவர் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
தொழிலாளர் சட்டங்கள் காலப்போக்கில் புதுப்பிக்கப்படலாம் என்று கூறிய அப்துல் ஹலீம், 1955-ஆம் ஆண்டு வேலைவாய்ப்புச் சட்டம் மற்றும் 1969-ஆம் ஆண்டு தொழிலாளர் சமூக பாதுகாப்பு (Socso) சட்டம் ஆகியவற்றை சிறந்த பாதுகாப்பை வழங்குவதற்காகப் பின்னர் வலுப்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு உதாரணமாகக் குறிப்பிட்டார்.
கிக் வேலையை முறைப்படுத்துவதில் மலேசியா ஒப்பீட்டளவில் முன்னேறிய நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மனிதவள அமைச்சின் இந்த முயற்சிக்கு அண்மையில் வருகை தந்த சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தலைமை இயக்குநரிடமிருந்து நேர்மறையான கருத்துக்கள் கிடைத்துள்ளதாகக் கூறினார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2026 ஜூன் மாதத்தில் கிக் வேலை குறித்த சர்வதேச தரநிலைகள் பற்றி விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில், எம்டியுசி-க்குள் இருக்கும் சில பிரிவினர் மற்றும் அதன் பொதுச் செயலாளர் கமருல் பஹாரின் மன்சூர் உள்ளிட்ட 11 அரசு சாரா நிறுவனங்களின் கூட்டணி, இந்தச் சட்டம் அவசரகதியில் கொண்டுவரப்பட்டது என்றும் தொழிலாளர் குழுக்களுடன் போதிய ஆலோசனைகள் நடத்தப்படவில்லை என்றும் கூறி, இச்சட்டத்தைத் தள்ளிப்போடுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.
இதற்குப் பதிலளித்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணம், இந்த விவகாரத்தில் எம்டியுசி-யின் உள்நிலைப்பாட்டை கேள்வி எழுப்பினார்.
மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வந்துள்ள கிக் தொழிலாளர் சட்டம், வேலைச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப கிக் தொழிலாளர்களுக்கு அடிப்படை சட்டப் பாதுகாப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
மலேசியாவின் கிக் பொருளாதாரத்தில் உள்ள சுமார் 1.64 மில்லியன் மக்கள், இந்தச் சட்டத்தின் கீழ் தெளிவான உரிமைகள், வெளிப்படையான ஒப்பந்தங்கள், முறையான பிணக்கு தீர்வு வழிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் பயனடைவார்கள் என்று டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)