Ad Banner
Ad Banner
 பொது

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு; நடுத்தர குடும்பங்களுக்கு  பெரும் தாக்கம்

09/04/2026 04:02 PM

பிரிக்பீல்ட்ஸ், ஏப்ரல் 09 (பெர்னாமா) -- மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் மோதல்களின் எதிர்மறை விளைவுகள் உலக பொருளாதாரம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் மக்களின் அன்றாட வாழ்வியல் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

உலக அளவிலான இந்தத் தாக்கம், நீண்டகாலத்திற்கு உணரப்படும் என்று சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் அறிவித்ததைத் தொடர்ந்து...

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உடனடியாக குறைய வாய்ப்பில்லை என்ற கவலையையும் அதனால் தாங்கள் எதிர்நோக்கும் சவால்களையும் பொதுமக்கள் சிலர் பெர்னாமா செய்திகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

காய்கறிகளின் விலை உயர்வால் பல உணவகங்கள், பதார்த்தங்களின் விலையை அதிகரிக்கும் நிலைப்பாட்டிற்கு தள்ளப்பட்டிருந்தாலும் வாடிக்கையாளர்களின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு பழைய விலைப்பட்டியலையே தாம் தொடர்ந்து பின்பற்றி வருவதாக உணவக உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

" விலைவாசி உயர்வோடு தற்போது வெப்ப சூழ்நிலையும் கடுமையாக உள்ளதால், வாடிக்கையாளர்களின் வருகை முன்பைக் காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப உணவுகளின் விலையையும் அதிகரித்தால்  வாடிக்கையாளர்களின் வருகை நாளுக்கு நாள் குறைவதுடன் அது உணவகங்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால்தான் முடிந்தவரை உணவு விலையை அதிகரிக்காமல் அதே பழைய விலையைப் பின்பற்றி வருகிறோம்," என்று உணவக உரிமையாளரான மனோகரன் செல்வராஜு தெரிவித்தார். 

வாடிகையாளர்களின் நிலைமையை புரிந்து கொண்டு அதிக விலையில் உணவுகளை விற்காமல் இருந்தால் உணவகங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சீரான நிலையில் இருக்கும் என்று வாடிக்கையாளரான கோபிநாதன் நாராயணன் என்பவர்  கூறினார்.

நிரந்தர கடைகள் வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி சிறுதொழில் வியாபாரம் செய்பவர்களின் விற்பனையும், விலை உயர்வால் தொய்வடைந்து வருவதாக சிலர் கருத்துரைத்தனர்.

"நான் பல ஆண்டுகளாக இங்கு இளநீரும் பசும்பாலும் விற்று வருகிறேன். அண்மைய காலமாக இளநீரும் பாலும் எனக்கு கூடுதல் விலையிலே மொத்தமாக கிடைக்கிறது. இதனால் அவற்றின் விலையை நான் அதிகரித்து விற்றாலும் வாடிக்கையாளர்கள் என்னிடம் அதிருப்தி தெரிவிக்கின்றனர். அதனால் நானும் பழைய விலையையே பின்பற்றுகிறேன்," என்று கலையரசு வையாபுரி என்பவர் தெரிவித்தார்.   

எரிசக்தி விலை உயர்வால், மலைப்பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளதாக 35 ஆண்டுகாலமாக பிரிக்பீல்ட்சில் பூ வியாபாரம் செய்து வரும் செந்தில்குமார் கலியபெருமாள் குறைபட்டுக் கொண்டார்.

விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில், அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தும் முயற்சிகள், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தல், மற்றும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு நேரடி ஆதரவுகளை வழங்குதல் போன்ற நீடித்த தீர்வுகள் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், நிலையான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சந்தை விலைகளை கண்காணித்தால் மட்டுமே, விலைவாசி உயர்வின் தாக்கத்தை ஓரளவு குறைக்க முடியும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)