பழைய கிள்ளான் சாலை, ஏப்ரல் 15 (பெர்னாமா) -- ஒவ்வோர் ஆண்டும் மலையாள வம்சாவளியினர் கொண்டாடும் பண்டிகைகளில் விஷுப் புத்தாண்டும் சிறப்பிடம் வகிக்கிறது.
குடும்பத்தில் செல்வம், வளம், சந்தோஷம் போன்ற நல்லவை தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் செய்து, உறவினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இந்நாளை அச்சமூகத்தினர் கொண்டாடுவார்கள்.
அந்த வகையில், இன்று வேலை நாளாக இருந்தாலும், மரபு மாறாத அம்சங்களுடன் விஷுப் புத்தாண்டை வரவேற்ற சிலாங்கூர், பழைய கிள்ளான் சாலையைச் சேர்ந்த ரவி ஷங்கர் எழுத்தச்சன் குடும்பத்தினருடன் சிறப்பு நேர்காணல்.
விஷு கனி, விஷு கைநீட்டம் மற்றும் விஷு சாத்யா ஆகியவை விஷு புத்தாண்டின் முக்கிய அம்சங்களாகும்.
புத்தாண்டின்போது காலையில், கிருஷ்ணர் சிலை, விளக்கு, கண்ணாடி, நாணயங்கள், கொன்றைப் பூ, தேங்காய், அரிசி, காய்கறிகள், தானியங்கள் உட்பட பூஜைக்கு தேவையான பொருட்களை வைத்து விஷுக் கனியைக் காண்பது வழக்கமாகும்.
முதல்நாளிலேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, காலையில் எழுந்ததும் கனி காண்பதுடன் இக்கொண்டாட்டம் தொடங்கி, பின்னர் பூஜை, உணவு, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையுடன் இந்நாள் களைக்கட்டும்.
இந்த தொன்றுதொட்ட பாரம்பரியத்தின் சிறப்பை தாம் எப்போதும் பின்பற்றுவதில் இருந்து தவறியதில்லை என்றும், அதற்கு ஏற்ப தமது குடும்பமும் அந்த மரபுகளை மதித்து தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் குடும்பத் தலைவர் ரவி ஷங்கர் எழுத்தச்சன் தெரிவித்தார்.
''எள்ளு விளக்கும் வைக்கப்படும். அதாவது தேங்காயில் எண்ணெய் ஊற்றி அதில் விளக்கு ஏற்றப்படும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் நேர்மறையான எண்ணங்களையும் வாழ்வில் தைரியமாக வாழ்வதற்கான சிந்தனையை கொடுக்கும் என்பது ஒரு நம்பிக்கை,'' என்றார் அவர்.
பூஜைக்குப் பின்னர், விஷு சாத்யா அதாவது சாதம், குழம்பு, அவியல், பொறியல், இனிப்பு பலகாரங்கள் என்று 16 வகையிலான பல்சுவை உணவுகளை குடும்பத்துடன் உண்டு மகிழ்வதில் இக்கொண்டாட்டம் முழுமைப் பெறுகிறது.
காலையிலேயே எழுந்து சமையலுக்கான ஏற்பாடுகளைச் செய்தப் பின்னர், அவற்றை நிறைவாக சமைத்துப் பரிமாறுவதில் திருப்திக் கொள்வதாக குடும்பத் தலைவி வினோஷினி ஷங்கர் தெரிவித்தார்.
''அனைவரும் ஒன்றாக இணைந்து சாத்யா சாப்பிடும்போது அது தனிசந்தோஷம்,'' என்றார் அவர்.
தற்போதைய பரபரப்பான வாழ்க்கைச் சூழல் மற்றும் நேரமின்மை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இது போன்ற கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது சற்று கடினமாகவே உள்ளது.
எனினும், வளரும் தலைமுறைக்கு இந்தப் பாரம்பரியத்தைக் கற்றுக் கொடுப்பதோடு, அவர்கள் அதனைப் பின்பற்றுவதை உறுதிசெய்வதிலும், குடும்பத்தில் இருக்கும் பெரியவர்கள் முனைப்புக் காட்ட வேண்டும் என்றக் கருத்தை இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் முன்வைத்தனர்.
இதனிடையே, விஷு கொண்டாட்டத்தின் போது வயதில் மூத்தவர்கள் வெற்றிலை பாக்குடன் பணம் வைத்து வயதில் சிறியவர்களுக்கு வழங்குவதை கைநீட்டம் என்று கூறுவர்.
அவற்றைப் பெற்றுக் கொண்ட ரவி ஷங்கரின் மகன் தமது விஷுப் புத்தாண்டு அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
பிறந்திருக்கும் இந்த விஷூ புத்தாண்டு வாழ்க்கையிலும் குடும்பத்திலும் நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)