Ad Banner
Ad Banner
 பொது

ஒப் திரிஸ் 4.0 சோதனை நடவடிக்கை; 2,500 லிட்டர் டீசல் பறிமுதல்

11/04/2026 02:56 PM

கோலாலம்பூர், ஏப்ரல் 11 (பெர்னாமா) -- மாற்றி அமைக்கப்பட்ட லாரிகளின் மூலம் உதவித் தொகை விலையிலான டீசலை தவறாகப் பயன்படுத்தி வந்த ஒரு கும்பலின் செயலை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன அமைச்சு, கே.பி.டி.என் நேற்றிரவு நடத்திய ஒப் திரிஸ் 4.0 சோதனை நடவடிக்கையில் முறியடித்தது.

அச்சோதனை நடவடிக்கையில் உதவித் தொகை விலைக்கும் தற்போதைய சந்தை விலைக்கும் இடையிலான மாறுபாட்டின் அடிப்படையில் கூடுதல் மதிப்புடையதாக கணிக்கப்பட்ட 2,500 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக  கோலாலம்பூர் கே.பி.டி.என்-இன் தலைமை அமலாக்க அதிகாரி முஹமட் ஷாரான் முஹமட் அர்ஷாட் தெரிவித்தார்.  

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல பெட்ரோல் நிலையங்களில், சம்பந்தப்பட்ட அக்கும்பல், மாற்றியமைக்கப்பட்ட லாரிகளைப் பயன்படுத்தி, எரிபொருளை வாங்கி வந்தது, உளவு நடவடிக்கையின் வழி கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

பரிசோதனையின் போது, அந்த லாரியின் பின்புறத்தில் 4,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கூடுதல் தொட்டி இருந்தது கண்டறியப்பட்டது.

அதன் மீது சோதனை செய்யப்பட்டதில், ​​அத்தொட்டியில் ஏற்கனவே சுமார் 2,500 லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்ததும் உறுதி செய்யப்பட்டதாக அவர் விவரித்தார்.

"மூன்று எண்ணெய் நிறுவனங்களின் பல ஃப்ளீட் அட்டைகளைப் பயன்படுத்தி டீசல்  பெறப்பட்டுள்ளது. மொத்தமாக ஐந்து ஃப்ளீட் அட்டைகள் உள்ளன," என்றார் அவர்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர்கள், அடுத்த நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர், ஒவ்வொரு நிலையத்திலும் 100 முதல் 250 லிட்டர் வரை எரிபொருள் நிரப்புவார்கள் என்றும் முஹமட் ஷாரான் கூறினார்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அக்கும்பல் கைது செய்யப்படுவதற்கு முன்னர், ஆறு வெவ்வேறு பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் நிரப்பியதாக நம்பப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். 

அடுத்தக்கட்ட விசாரணைக்காக 20 வயதிற்குட்பட்ட இரு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
 -- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)