Ad Banner
 பொது

தமிழ், சீக்கிய & மலையாளி சமூகத்தினருக்குப் பிரதமர் வாழ்த்து

14/04/2026 02:24 PM

கோலாலம்பூர், 14 ஏப்ரல் (பெர்னாமா) --  இந்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தமிழ், சீக்கிய மற்றும் மலையாளி சமூகத்தினருக்கும் சித்திரைப் புத்தாண்டு, வைசாகி மற்றும் விஷு நல்வாழ்த்துக்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துக் கொண்டார்.

புத்தாண்டைக் கொண்டாடுபவர்களுக்கு மன அமைதியும், நீடித்த ஆரோக்கியத்தையும், ஏராளமான ஆசீர்வாதங்களையும் அது கொண்டு வர வேண்டும் என்றும் பிரதமர் இன்று தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மலேசியா ஒரு வளமான மற்றும் நல்லிணக்கமான நாடாகத் தொடர்ந்து வலுவாக நிலைத்திருக்க முழு நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் ஒற்றுமையைப் பேணுவதற்காக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

மரபுவழிப் பன்முகத்தன்மை என்பது பரஸ்பர மரியாதை, பரஸ்பரப் புரிதல் மற்றும் பரஸ்பர வலுவூட்டல் ஆகிய உணர்வுடன் மக்களை ஒருமைப்பாட்டுப் பிணைப்பில் ஒன்றிணைப்பதற்கான அடித்தளமாகும்.

தமிழ் நாள்காட்டியின்படி ஆண்டின் முதல் நாளான இன்று சித்திரைப் புத்தாண்டு கொண்டாடப்படுவதோடு, சீக்கிய மற்றும் பஞ்சாபி நாள்காட்டிகளின்படி வைசாகி தினம் அறுவடை காலத்தின் தொடக்கத்தைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், மலையாள சமூகத்தினரால் நாளை கொண்டாடப்படும் விஷு தினம், அச்சமூகத்தின் நாள்காட்டியின்படி ஆண்டின் தொடக்கத்தைக் குறிப்பதோடு, புதுப்பித்தல் மற்றும் செழிப்பின் அடையாளமாகவும் விளங்குகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)