கோலாலம்பூர், 20 ஏப்ரல் (பெர்னாமா) -- தமது மகளைக் கடத்திய முன்னாள் கணவரைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக, தேசிய போலீஸ் படைத் தலைவர் மற்றும் மேலும் மூவருக்கு எதிராக பாலர் பள்ளி ஆசிரியை எம். இந்திரா காந்தி தொடர்ந்த வழக்கில், புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக் கோரிய அவரின் விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
புதிய ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதற்கான தனது அதிகாரத்தைப் பயன்படுத்த நீதிமன்றத்திற்கு அனுமதிக்கும் எந்தச் சூழ்நிலைகளையும் அந்த மனு வெளிப்படுத்தவில்லை என்பதைக் கண்டறிந்து, டத்தோ முஹமட் சைனி மஸ்லான் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு ஏகமனதாக அம்முடிவை தெரிவித்தது.
அந்தப் புதிய ஆதாரங்கள் முன்னதாக கே. பத்மநாதன் என்று அறியப்பட்ட அவரின் முன்னாள் கணவர், முஹமட் ரிடுவான் அப்துல்லா, BUDI95 மற்றும் MyKasih SARA ஆகியவற்றை பயன்படுத்தியது தொடர்பானதாகும்.
விண்ணப்பதாரர் சமர்ப்பிக்க விரும்பும் ஆதாரங்கள், உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது தயார்படுத்தாமல், அது நிறைவடைந்தப் பின்னர் தற்போது வெளிவருவதாக அவர் கூறினார்.
பின்னர், முதன்மை மேல்முறையீட்டிற்கான தீர்ப்பு தேதியை வழங்க, வழக்கு நிர்வகிப்பிற்கு ஏப்ரல் 24-ஆம் தேதி முஹமட் சைனி நிர்ணயித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)