Ad Banner
 பொது

பல்லின மக்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த கோரிக்கை

14/04/2026 05:42 PM

கோலாலம்பூர், 14 ஏப்ரல் (பெர்னாமா) -- பல்லின மக்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

செபாக் தக்ராவ் ஒரு தேசிய பாரம்பரிய விளையாட்டாக வலுப்படுத்தப்பட வேண்டிய ஒரு முக்கியமான விளையாட்டாகக் கருதப்படுவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

தொடக்கத்தில், சில விளையாட்டுகள் மீதான ஆர்வம் இனத்தின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், செபாக் தக்ராவ் விளையாட்டில் பல்லின மக்களின் பங்கேற்பை விரிவுப்படுத்துவதில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

''இது இளைஞர்களுக்கான ஒரு வாய்ப்பும் களமும் ஆகும். உண்மைதான், ஆரம்பக் கட்டங்களில் இது மிகவும் சுவாரஸ்யமாக மாறியது. சீனப் பிள்ளைகளுக்கு கூடைப்பந்து போல, பெரும்பாலான மலாய் பிள்ளைகளுக்கு இது சுவாரஸ்யமாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், மலாய் பிள்ளைகளை மற்ற விளையாட்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படுவதைப் போலவே, பிற இனங்களைச் சேர்ந்த பிள்ளைகளும் இதில் ஆர்வம் காட்டிப் பங்கேற்கத் தொடங்குவதை உறுதி செய்வதுதான் கே.பி.எஸ்-இன் பங்கு,'' என்றார் அவர்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய செபாக் தக்ராவ் கழக வளாகத்தின் திறப்பு விழாவில் அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.

செபாக் தக்ராவ் நீண்ட காலமாக சமூக வாழ்வில், குறிப்பாக கிராமப்புறங்களில், அவர்களின் வாழ்வில் ஒன்றிணைந்து விளங்குவதாலும், ஏறக்குறைய அனைத்துத் தலைமுறையினரும் இந்த விளையாட்டை அறிந்திருப்பதாலும் அதற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)