ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 14 (பெர்னாமா) -- கிங் ஸ்டிரீட்டில் சட்ட அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு மாடிக் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த அனுபவமிக்க வழக்கறிஞரான டத்தோ சன் மார்கன் கணபதியின் மரணம் தமக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளதாக அவரின் ஒரே மகனான டாக்டர் ஆனந்த ராஜ் சான் மார்க்கன் கூறியுள்ளார்.
தமது தந்தையின் இழப்பால் குடும்பத்தினர் இன்னும் துயரத்தில் ஆழ்ந்திருப்பதால் அதிலிருந்து மீள்வதற்கான அவகாசத்தை தருமாறு, இன்று காலை பினாங்கு மருத்துவமனை தடயவியல் மருத்துவத் துறை வளாகத்தில் சந்தித்தபோது, டாக்டர் ஆனந்த ராஜ் கேட்டுக்கொண்டார்.
மறைந்த சன் மார்கனின் உடல், இன்று பிற்பகல் மணி 4 முதல் 6 வரை இறுதி மரியாதை செலுத்தப்படுவதற்காக குளுகோரில் உள்ள அவரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதோடு பத்து லஞ்சாங் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நேற்று மதியம் சுமார் 12.14 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சன் மார்கனைத் தவிர்த்து, பி.ஜே. சந்திரா என்ற பெண் குமாஸ்தாவும் உயிரிழந்தார்.
இதனிடையே, அபு சித்தி லேனில் உள்ள சட்ட அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த தமது அக்கா சந்திரா,தமது முதலாளி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றுவதை நிறுத்திவிட்டு சம்பந்தப்பட்ட சட்ட அலுவலகத்தில் கடந்த ஒன்பது மாதங்களாகவே பணிபுரிவதாக அவரின் தங்கை பி.ஜே. சஜ்னிதெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் தான் பாயான் பாருவில் உள்ள ஒரு கோவிலில் இருந்ததாகவும், நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தபோதுதான் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்ததாகவும் சஜ்னி கூறினார்.
அவர்களுடைய இளைய சகோதரர் நாளை அமெரிக்காவிலிருந்து வந்தவுடன் சந்திராவின் இறுதிச் சடங்கு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)