ஈப்போ, ஏப்ரல் 15 (பெர்னாமா) -- மேற்காசியாவில் நீடிக்கும் மோதலைத் தொடர்ந்து ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தைச் எதிர்கொள்ளும் வகையில், வரவு செலவுத் திட்டச் சீரமைப்பைச் செயல்படுத்துவது குறித்து பேராக் மாநில அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
இந்நெருக்கடியின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கு, கூடுதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவதற்கான, மாநில சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்த, மாநில அரசாங்கத்திற்கு தற்போது எந்தவொரு திட்டமும் இல்லை என்று, அம்மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ சாரனி முஹமட் தெரிவித்தார்.
கொவிட்-19 காலகட்டத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், அரசாங்கம் சீரமைப்பைத் தவிர்த்து, எந்தவொரு கூடுதல் வரவு செலவு திட்டத்தையும் செய்யவில்லை என்று டத்தோ ஶ்ரீ சாரனி கூறினார்.
“நடப்பிலுள்ள வரவு செலவுத் திட்டத்தில், எங்கள் கருத்துப்படி, செயல்படுத்த முடியாத சில திட்டங்கள் இருப்பதால் மத்திய அரசாங்கத்திலும் மறுசீரமைப்பு நடைபெறுகிறது. ஏனெனில், கட்டுமானச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. ஒருவேளை, மற்ற செலவுகளுக்கான பிற உதவிகளின் வடிவத்தில் நாம் மறுசீரமைக்கலாம்,” என்றார் அவர்.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் மக்களுக்கு உதவுவதற்கு, பேராக் மாநில அரசாங்கம் கூடுதல் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யத் தயாராக உள்ளதா என்று, இன்று கெபாயாங் சட்டமன்ற உறுப்பினர் Nga Kor Ming எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு சாரனி அவ்வாறு பதிலளித்தார்.
அதேவேளையில், மத்திய அரசு வழங்கி வரும் உதவிகளைத் தவிர்த்து, பேராக் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம், SADC மூலம் உணவுப் பொருட்களை மலிவு விலையில் விற்பனை செய்வது உள்ளிட்ட, மக்களுக்கு உதவும் வழிமுறைகளையும் மாநில அரசு ஆராயும் என்றும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: மாலை 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)